நீங்க ரொம்ப ‘அதிர்ஷ்டசாலி’... ‘உருவத்தை’ கேலி செய்த முன்னாள் வீரருக்கு... ‘பதிலடி’ கொடுத்த ‘ஆர்சிபி’ வீரரின் வைரல் ட்வீட்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 23, 2019 10:27 AM

ஆர்சிபி வீரர் பார்த்தீவ் பட்டேலின் உருவத்தை வைத்து அவரைக் கேலி செய்த டீன் ஜோன்ஸிற்கு அவர் பதிலடி கொடுத்த ட்வீட் வைரலாகி வருகிறது.

RCB Parthiv Patels Epic Reply To Dean Jones Teasing His Height

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆரோன் ஃபிஞ்ச், கேன் ரிச்சர்ட்சன், ஜோசுவா பிலிப் ஆகிய 3 ஆஸ்திரேலிய வீரர்களை அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் அவர் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேலின் உருவம் குறித்து கேலி செய்து பேசியிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

டீன் ஜோன்ஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பார்த்தீவ் நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்சுடன் சேர்ந்து தொடக்க வீரராக விளையாடப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கை எளிதாகிவிட்டது. அவர் உங்களை விட உயரமானவர். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களும்தான்” எனக் கூறியுள்ளார்.

இந்த ட்வீட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், டீன் ஜோன்ஸிற்கு பதிலடி கொடுத்து பார்த்தீவ் பட்டேல் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், “நான் ஆஸ்திரேலிய வீரருடன் விளையாடுவதை விரும்புகிறேன். ஆரோன் ஃபிஞ்ச் மிகச்சிறந்த வீரர். உங்களைப் போல அல்லாமல் அவர் ஆஸ்திரேலியாவில் அதிக நேரம் செலவிடுகிறார். நீங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காவது உங்கள் வீட்டிற்குச் செல்கிறீர்களே.  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” என டீன் ஜோன்ஸிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள் என பார்த்தீவ் பட்டேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த விமர்சனங்கள் குறித்து விளக்கமளித்துள்ள டீன் ஜோன்ஸ், “நாங்கள் விளையாட்டாகவே பேசிக்கொள்கிறோம். கிரிக்கெட்டிலிருந்து பார்த்தீவ் ஓய்வு பெறும்போது மிகச்சிறந்த வர்ணனையாளராக வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Tags : #IPL #ROYAL-CHALLENGERS-BANGLORE #RCB #VIRATKOHLI #PARTHIVPATEL #DEANJONES #VIRAL