ரத்தம், நாடி நரம்புல.. கிரிக்கெட் வெறி ஊறிப்போன ஒருத்தரால தான் இப்படி செய்ய முடியும்.. மெய்சிலிர்க்க வைக்கும் அஸ்வின்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் தற்போதைய சுழற்பந்து வீச்சாளர்களில் தலைச் சிறந்த வீரராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin).
குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 427 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வின், இந்திய பந்து வீச்சாளர்களில், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்த ரவிச்சந்திரன் அஸ்வின், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தார். நடுவே, சில தொடர்களில் வாய்ப்பு கிடைக்காமல் திணறினார். ஆனால், தற்போது அதிலிருந்து மீண்டு வந்த அஸ்வின், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில், கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.
எதிரணியினரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கில்லியான அஸ்வின், சமீபத்தில் இஎஸ்பிஎன் க்ரிக்இன்போவிற்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் பவுலிங்கிற்கு தயாராவதற்கு பயன்படுத்தும் உத்திகள் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், மார்னஸ் லபுஷேன் போன்ற எதிரணியினரின் முக்கிய வீரர்களை வீழ்த்த எப்படி திட்டங்களை வகுப்பேன் என்பது பற்றி விளக்கியுள்ளார்.
'ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை எடுக்க ஒரு வாரம், இரண்டு வாரமல்ல. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை திட்டம் போட்டு ஆவேசமாக இருந்தேன். அவர் பேட்டிங் செய்யும் மேட்ச்களை ஒரு கணம் விடாமல், மீண்டும் மீண்டும் ஸ்லோ மோஷனில் கவனித்தேன். அவர் ஆடும் வெவ்வேறு போட்டிகள் அனைத்தையும் மிகவும் கவனமாக உற்று நோக்கினேன். ஸ்மித்தின் பேட்டிங் மிகவும் வேகமாக இருக்கும். அவரது பெரும்பாலான பேட்டிங், அவரின் கைகளில் இருந்து தான் ஆரம்பமாகும். எனவே, அவரது வலிமையான கையைத் தொந்தரவு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாகவே முடிவு செய்திருந்தேன்.
அதன் படி, ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு பந்து வீசிய போது, வெவ்வேறு வேகத்திலும், வெவ்வேறு லைன் அப்பிலும் பந்து வீசினேன். அவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி விட்டேன் என்பதையும் உணர்ந்தேன். இதே போல, ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எப்படி ஆடினார் என்பதை உற்றுக் கவனித்தேன். அவர் பந்தினை எங்கு அடிக்கிறார்?, எவ்வளவு ரன்களை அடிக்கிறார்? என்பதையும் நான் கவனித்து வைத்துக் கொண்டேன்.
இதே போல, இலங்கை அணிக்கு எதிராக ஜோ ரூட் பேட்டிங் செய்த போது, ஒரு பந்தை அவர் ஆப் சைட் Defend செய்து ஆடப் போகிறார் என்றால், அடுத்த பந்தினை ஸ்வீப் செய்து ஆடுவார். அதனைக் கவனித்து, அவருக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரில் பந்து வீசினேன்' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தனது கிரிக்கெட் கரியரின் நடுவே, சற்று சோகமான பக்கங்கள் இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்த அஸ்வின், பல மாத காலம் வரை எதிரணி வீரர்களை விக்கெட் எடுக்கத் திட்டமிட்டது பற்றி தெரிவித்திருப்பது, கிரிக்கெட்டில் அவர் எந்தளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை உணர வைக்கிறது.
கிரிக்கெட் மட்டுமில்லாது, எந்த துறை ஆனாலும், அதில் நாம் சாதிக்க வேண்டுமென்றால், கடின உழைப்புடன் நாம் நிறைவேற்றத் துடிக்கும் துறை மீது வேட்கை இருந்தால், நிச்சயம் நினைத்ததை வென்று முடிக்கலாம் என்பதே அஸ்வினின் கிரிக்கெட் கரியர் நமக்கு உணர்த்தும் கருத்து.