நான் இறப்பதற்கு முன் அதனை பார்ப்பேன்.. அஸ்வின் தந்தை சொன்ன உருக வைக்கும் விஷயம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார்.
தான் அறிமுகமானது முதல், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தலாக பந்து வீசி வந்தார் அஸ்வின். ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் அவருக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாஹல், குல்தீப் யாதவ் என புதிய சுழற்பந்து வீச்சாளர்கள், இந்திய அணிக்குள் அந்த சமயத்தில் நுழைந்து சிறப்பாக பந்து வீசியதால், அஸ்வினின் வாய்ப்பு கேள்விக்குறியானது.
குறைந்த ஓவர் போட்டிகளில், அஸ்வின் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருந்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்காத போதும், தொடர்ந்து கடின உழைப்பை அஸ்வின் செலுத்தி வந்த நிலையில், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன், இந்திய அணி பல டெஸ்ட் தொடரை வென்று சாதனை பெறவும், மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுத்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல், தனது விடாமுயற்சியால் இந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடரிலும் அணியில் இடம்பிடித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் பல ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்து வரும் அஸ்வின், சில ஆண்டுகளுக்கு முன் தனது கிரிக்கெட் கேரியரில் சந்தித்த சில கடினமான நேரம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
'2018 ஆம் ஆண்டின் போது, இந்திய அணியில் எனக்கான வாய்ப்பு மங்க ஆரம்பித்தது. அது மட்டுமில்லாமல், தொடர்ந்து காயத்தினாலும் அவதிப்பட்டு வந்தேன். இதனால், ஓய்வு பெறலாம் என பலமுறை யோசித்திருந்தேன். அதே போல, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், எனது கிரிக்கெட் பயணம் கடினமான நிலையை எட்டியதால், அதிகம் கவலை கொண்டேன்.
அத்தகைய சமயத்தில் எப்படிப்பட்ட மன அழுத்தத்தில் இருந்தாலும் என் மனைவியிடம் நான் மனம் விட்டு பகிர்ந்து கொள்வேன். என் மனைவியைப் போல அந்த நேரத்தில் எனது தந்தையும் மிக்க உறுதுணையாக இருந்தார். அவர் என்னிடம், "ஒயிட் பால் கிரிக்கெட் போட்டியில் நீ நிச்சயம் கம்பேக் கொடுப்பாய். நான் இறப்பதற்கு முன் அதனை பார்ப்பேன்", என என்னிடம் உருக்கமாக குறிப்பிட்டார்' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வினின் தந்தை கூறியது போலவே, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, டி 20 போட்டிகளில் வாய்ப்பு பெற்றுள்ள அஸ்வின், விரைவில் ஒரு நாள் போட்டித் தொடரிலும் வாய்ப்பு பெற்று, பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.