NEVER GIVE UP… நீங்களாக ஒப்புக்கொள்ளும் வரை தோல்வி இல்லை… மனம் திறந்த அஸ்வின்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவர் ஆக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அஸ்வின், 427 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். இன்னமும் அவர் உலகின் முன்னணி கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் தொடரோ, வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடரோ தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட அஸ்வின் தவறுவதே இல்லை.
அப்படிப்பட்ட அஸ்வின், சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற நினைத்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை. காரணம் இது குறித்து தகவல் தெரிவித்தது வேறு யாரோ இல்லை. அஸ்வினே, தன் கிரிக்கெட் வாழ்க்கையின் கறுப்பு பக்கங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
தற்போது அஸ்வினுக்கு 35 வயதாகிறது. இந்த வயதில் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற சிந்திப்பது வழக்கம் தான். ஆனால், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அப்படிப்பட்ட எண்ணம் அஸ்வினுக்கு வந்துள்ளது.
‘2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிடலாமா என்று பல நேரங்களில் நினைத்தது உண்டு. நான், எனது திறமையை வளர்த்துக் கொள்ள நிறைய முயற்சி எடுத்தும் அது போதிய பலனைத் தரவில்லை என்று எண்ணினேன். நான் எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டேனோ அந்த அளவுக்கு என் இலக்கும் தள்ளிப் போனது.
அந்தக் காலக்கட்டங்களில் தான், நான் 6 பந்து வீசிய பின்னர் தாங்க முடியாத மூச்சுத் திணறலுக்கு உள்ளானேன். என் உடல் முழுக்க வலி அதிகமாக பரவும் நேரங்கள் எல்லாம் இருந்தன.
இப்படி நான் என் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தபோது, அதை பலர் புரிந்து கொள்ளவில்லை என்று கருதினேன். இதைப் போன்று அவதிப்படும் பலருக்கு ஆதரவு கிடைக்கும் போது எனக்கு மட்டும் ஏன் அது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு உள்ளேன்.
இப்படி நான் வலியால் துடிக்கும் போதும், அவதிப்பட்டு வரும் போதும் என் மனைவியிடம் மட்டும் தான் அது குறித்து மனம் திறந்து பேசுவேன். ஆனால், என் தந்தை என் திறமை குறித்து அதிக நம்பிக்கையோடு இருந்தார். மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நீ விளையாடுவாய் என்றும், தான் இறப்பதற்கு முன்னர் அதைப் பார்ப்பேன் என்றும் உறுதியாக சொன்னார்’ என்று தனது பெர்சனல் பக்கங்களை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார் அஸ்வின்.