‘அன்னைக்கு அஸ்வின் பண்ணது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல’!.. ‘ஆனா தோனி உடனே அவரை கூப்பிட்டு திட்டிட்டாரு’.. பல வருச ‘சீக்ரெட்டை’ உடைத்த சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் அஸ்வின் விளையாடியபோது தோனி அவரை கடுமையாக திட்டிய சம்பவத்தை சேவாக் கூறியுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போட்டியில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் (Ashwin), கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனுக்கு (Eoin Morgan) இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அப்போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் (Rishabh Pant) அடித்த பந்தை கொல்கத்தா வீரர் ராகுல் திரிபாதி (Rahul Tripathi) எடுத்து வீசினார். அது எதிர்பாராத விதமாக ரிஷப் பந்த் மீது பட்டு சிறிது தூரம் சென்றது. இதனைப் பார்த்த அஸ்வின், ரிஷப் பந்தை இரண்டாவது ரன்னுக்கு அழைத்து ஓடினார். இதுதான் இவ்வளவு களேபரத்துக்கு காரணம்.
பொதுவாக ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டின் (Spirit of Cricket) படி, பீல்டர் வீசும் பந்து பேட்ஸ்மேன் மீது தெரியாமல் பட்டுச் சென்றால் ரன்கள் ஓடமாட்டார்கள். ஆனாலும், அப்படி ஓடி ரன் எடுக்கவும் விதியில் இடம் உள்ளது. அதனால் அஸ்வின் அன்று விதிப்படி ஓடி ரன் எடுத்துள்ளார். ஆனால் இதை கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் விரும்பவில்லை. இதனால்தான் அஸ்வினுக்கு அவருக்கும் இடையே மைதானத்தில் மோதல் வெடித்தது.
ஆனால் இந்த விவகாரம் இவ்வளவு பூதாகரமாக வெடிக்க காரணம் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) தான் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், மைதானத்தில் இயான் மோர்கன்-அஸ்வின் மோதல் நடைபெற்றபோது, அவர்தான் அஸ்வினை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
பொதுவாக மைதானத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து வீரர்கள் பொதுவெளியில் பேசுவது கிடையாது. ஆனால் இயான் மோர்கன் எதற்காக அஸ்வினுடன் சண்டையிட்டார் என்று போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறிவிட்டார். இதன்பின்னர் தான் அனைவருக்கும் அங்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் (Virender Sehwag), இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் (PBKS) அணிக்காக விளையாடிபோது, அஸ்வின் சிஎஸ்கே (CSK) அணியில் விளையாடினார். அப்போது ஒரு போட்டியில் மேக்ஸ்வெல்லின் (Maxwell) விக்கெட்டை வீழ்த்தியதும், தரையில் இருந்து மண்ணை எடுத்து ஊதி அந்த விக்கெட்டை அஸ்வின் கொண்டாடினார். அப்போது அஸ்வினின் செயல் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அஸ்வின் இப்படி செய்திருக்கக்கூடாது, இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இல்லை என்று நான் பொதுவெளியில் கூறவில்லை. அந்த பிரச்சனை அதோடு முடிந்துவிட்டது. ஆனால் அஸ்வின் அப்படி செய்தது சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு (Dhoni) பிடிக்கவில்லை. உடனே அஸ்வினை அழைத்து கோபமாக கண்டித்து அனுப்பினார்’ என சேவாக் கூறியுள்ளார். முன்னதாக அஸ்வினுக்கு ஆதரவாக இயான் மோர்கனை விமர்சித்து சேவாக் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
