"இந்திய அணில யார் கூடவும் எனக்கு பிரச்சினை இல்ல".. மனம் திறந்து விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் & டெஸ்ட் தொடரினை கைப்பற்றியது.
குறிப்பாக டாக்காவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய ஸ்கோர் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் தொடக்க டாப் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக மேட்ச் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இருப்பினும் அஸ்வின் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின் 42* ரன்களும் ஷ்ரேயாஸ் 29* ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தனர். இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முக்கியமான நேரத்தில் 42 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்களையும் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகளவில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் அஸ்வின், பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறார். உலக அரங்கில் சிறந்தவொரு டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார் அஸ்வின்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “நான் இந்திய அணியின் ஜெர்சியை பெருமையுடன் அணிந்ததிலிருந்து என்னைப் பின் தொடர்ந்த ஒரு கருத்து "நான் அதீத சிந்தனையாளர்" என்பது. நான் இப்போது சிறிது நேரம் அதைப் பற்றி யோசித்து வருகிறேன், மக்கள் மனதில் இருந்து அந்த வார்த்தையை அழிக்க ஒரு PR பயிற்சியை நான் தீவிரமாக பரிசீலித்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன்".
"ஒவ்வொரு நபரின் பயணமும் தனித்துவமானது, சில பயணங்கள் எளிமையானது. சில பயணங்கள் அதிக சிந்தனையை கோருவது".
"அதீத சிந்தனையாளர் என்பது என் கிரிக்கெட்டை நான் விளையாடும் விதம் பற்றியது, மற்றவர்களை விளையாட பரிந்துரைக்கும் விதம் அல்ல".
"இறுதியாக, நான் விளையாட்டைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன், ஏனென்றால் யோசனைகள் பகிரப்படும்போது அவை அதிசயமான சாதனைகளாகப் பெருகும் என்று நான் நம்புகிறேன். அது பிரபலமாகாதது கூட என்னைத் தடுக்காது, ஏனெனில் எனது குறிக்கோள் போரில் வெற்றி பெறுவது அல்ல. அதன் முடிவில் கற்றுக்கொள்வது.
எனக்கு எந்த சக வீரர்கள் யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை, இது பயணத்தின் போது நான் படித்த சில கட்டுரைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கூறுகிறேன். இந்த வார்த்தை ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்ள 13 வருடங்கள் ஆனது" என்று அஸ்வின் ட்வீட் செய்துள்ளார்.
Also Read | டெஸ்ட் மேட்சா?.. T20- யா?.. மகள்களுடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய இந்திய வீரர் ரவி அஸ்வின்..