"'ரிஷப் பண்ட்' கிட்ட கேட்டது தான் என் 'தப்பு'... அதுக்கு முன்னாடி வரைக்கும்..." அஸ்வின் சொன்ன பரபரப்பு 'கருத்து'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது டி 20 தொடரில் இந்திய அணி மோதி வரும் நிலையில், இதற்கு முன்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது.
இந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் சிறப்பான பங்கை அளித்திருந்தார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில், கீப்பிங் செய்வதில் சற்று சொதப்பிய ரிஷப் பண்ட், அதன் பிறகு தனது தவறுகளை திருத்திக் கொண்டு, மிக அற்புதமாக கீப்பிங் செய்தார். இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரிஷப் பண்ட் மீது சிறிய பிழை ஒன்றைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அஸ்வின் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த நிலையில், தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார். ஆனாலும், இந்த தொடர் முழுக்க அஸ்வினின் டி.ஆர்.எஸ் கோரிக்கைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அஸ்வின், 'இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை, எனது டி.ஆர்.எஸ் கோரிக்கைகள் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த தொடரில் ரிஷப் பண்ட் முடிவு எனக்கு ஏமாற்றத்தை தந்தது.
நான் வீசும் பந்து லைனுக்குள் செல்லுமா இல்லையா என்பதை என்னால் கணிக்க முடியும். ஆனால், அதைவிட விக்கெட் கீப்பர் அது பற்றி தெரிவிப்பது பேருதவியாக இருக்கும். ஆனாலும், அந்த விஷயத்தில் பண்ட் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், என்னுடைய டி.ஆர்.எஸ் முடிவுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.
நான் ஒரே ஒரு பகுதியில், முன்னேற்றத்தைக் காண வேண்டும் என நினைக்கிறேன் என்றால், அது நிச்சயம் டி.ஆர்.எஸ்-ல் சரியாக கணிப்பதே ஆகும். இனி வரும் போட்டிகளில், நானே முழுமையாக டிஆர்எஸ் பக்கம் கவனம் செலுத்தப் போகிறேன்' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.