'சேவாக்' LEFT HAND'ல பேட்டிங் பண்ற மாதிரி இருக்கு... இப்படி ஒருத்தர 'கிரிக்கெட்'ல நான் பாத்ததே இல்ல... 'இந்திய' வீரரின் ஆட்டத்தால் மெய்சிலிர்த்து போன 'இன்சமாம் உல் ஹக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில், 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது. இதில், இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணியினர் வீசிய பந்துகளை சிதறடித்தார்.
இந்த இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய ரிஷப் பண்ட் (Rishabh Pant), ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடித்திருந்தார். அதிக அனுபவமுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் பந்தை, ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டாக்கியதை, இந்தாண்டின் சிறந்த கிரிக்கெட் ஷாட் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் (Inzamam Ul Haq) பாராட்டிப் பேசியுள்ளார். 'ரிஷப் பந்த் மிகச் சிறந்த வீரர். கடந்த சில காலங்களுக்கு பிறகு, அழுத்தம் ஏதுமின்றி, தனது பாணியில் ஆடும் ஒரு வீரராக அவரைப் பார்க்கிறேன். 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த போதும், அவர் ஆடிய விதம் அற்புதமாக இருந்தது.
பிட்ச் பற்றியும், எதிரணியினர் அடித்த ரன் பற்றியும் எந்த கவலையும் இல்லாமல், தனது ஸ்டைலில் அவர் ஆடுகிறார். அவர் ஆடுவதை நான் முழுவதும் ரசித்து பார்த்தேன். சேவாக், இடதுகையில் பேட் செய்தால் எப்படி இருக்குமோ, அதே போல ரிஷப் பண்ட் பேட்டிங் இருக்கிறது.
நான் சேவாக்கிற்கு எதிராக ஆடியுள்ளேன். அவர் ஒரு போதும், ஆடும் சூழ்நிலை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். பீல்டர்கள் எங்கு இருந்தாலும், பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும், அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். சேவாக்கிற்கு பிறகு, எந்த கவலையும் இல்லாமல் ஆடும் ஒரு வீரரை இப்போது தான் நான் பார்க்கிறேன்.
ரிஷப் பண்ட் இந்தியாவில் மட்டுமல்ல. ஆஸ்திரேலியாவிலும் இதைச் செய்து காட்டினார். இந்திய அணியில் அப்போது சச்சின், டிராவிட் இருந்தார்கள். இப்போது கோலி, ரோஹித் இருக்கிறார்கள். ஆனால், ரிஷப் பண்ட் ஆடும் விதம், உண்மையாக ஆச்சரியமளிக்கிறது. அவரது தன்னம்பிக்கை அசாத்தியமானது. இப்படிப்பட்ட ஒரு வீரரை கிரிக்கெட் உலகில் நான் பார்த்ததே இல்லை' என ரிஷப் பண்ட்டை, இன்சமாம் உல் ஹக் புகழ்ந்து தள்ளியுள்ளார்.