"அடிச்சு சொல்றேன்.. இந்த டீம் தான் '6' விக்கெட் வித்தியாசத்துல ஜெயிக்க போறாங்க.." இப்போதே கணித்த 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இன்னும் 10 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்காக, இரு அணிகளும் ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த நிலையில், சவுதாம்ப்டன் மைதானத்தில், வரும் 18 முதல் 22 ஆம் தேதி வரை, இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால், எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் என்பதிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்து ஆடுகளங்கள், வேகப்பந்து வீச்சிற்கு அதிக சாதகமாக இருக்கும் என்ற நிலையில், இரு அணிகளிலும் உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும், பிட்ச் கண்டிஷன் மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்களின் சூழ்நிலை ஆகியவற்றை புரிந்து கொண்டு, எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது பற்றியும், பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் (Irfan Pathan), டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் வெற்றி வாய்ப்பு பற்றி பேசிய போது, 'டெஸ்ட் போட்டிகளிலேயே, மிகப்பெரிய போட்டி என்றால், அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தான். இதில், நியூசிலாந்து அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். அவர்களுக்கு 55 சதவீத வெற்றி வாய்ப்பும், இந்திய அணிக்கு 45 சதவீத வெற்றி வாய்ப்பும் உள்ளது.
இதில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தான் அதிக ரன் ஸ்கோரராக இருப்பார். அதே போல, பந்து வீச்சைப் பொறுத்தவரையில், டிரெண்ட் போல்ட் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவர், அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்பது என் கணிப்பு' என தெரிவித்துள்ளார். அதே போல, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் (Scott Styris), டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பற்றி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என நான் நினைக்கிறேன். அதுவும், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதே என் கணிப்பு. இதில், டெவான் கான்வே அதிக ரன்களையும், டிரெண்ட் போல்ட் அதிக விக்கெட்டுகளையும் எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்' என ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் கணித்தது போல, பலரும் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என கணித்து வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம், இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்கள், நியூசிலாந்து மைதானங்களைப் போலவே இருப்பது தான்.
அது மட்டுமில்லாமல், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டித் தொடரிலும் நியூசிலாந்து அணி மோதி வருகிறது. இதனால், அவர்கள் தங்களை இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப தயார் செய்தும் கொள்வார்கள் என்பதால் தான், நியூசிலாந்து அணியின் பெயரை பலரும் தெரிவித்து வருகின்றனர்.