'சச்சின்' சாதனையை முறியடித்த 'ரோஹித்'... ஓபனிங் பேட்ஸ்மேனாக '7,000 ரன்கள்'... அதிரடி நாயகனின் கலக்கல் 'சாதனை'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை தொட்ட வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா தன்வசமாக்கியுள்ளார். இதன் மூலம் அவர் சச்சின், ஹசிம் ஆம்லா ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், நேற்றைய போட்டியில், 42 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக புதிய சாதனை படைத்தார்.
இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக ஆடி, அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தொடக்க வீரர் வரிசையில் 7 ஆயிரம் ரன்களை எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ஷேவாக் ஆகியோர் இந்த மைல்கல்லை கடந்துள்ளனர்.
7 ஆயிரம் ரன்களை ரோகித் சர்மா 137 போட்டிகளில் கடந்துள்ளார். இதன் மூலம் அவர் தென்னாப்பிரிக்காவின் ஹசிம்ஆம்லா மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். ஆம்லா 144 இன்னிங்சிலும், தெண்டுல்கர் 160 இன்னிங்சிலும் தொடக்க வீரர் வரிசையில் 7 ஆயிரம் ரன்களை எடுத்து இருந்தனர்.
32 வயதான ரோகித்சர்மா 2013-ம் ஆண்டு முதல் தொடக்க வீரராக ஆடி வருகிறார். இனி வரும் காலங்களில் யாரும் தொட முடியாத உச்ச சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
