'பழிவாங்கப்படுகிறாரா தோனி?!'... 'என்ன நடக்கிறது?'... 'ரசிகர்கள் ஆதங்கம்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கும், தோனிக்கும் இடையிலான பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளதால் தான், இந்திய அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தோனியை அறிமுகப்படுத்தியவர், கங்குலி. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, தோனி அசுர வேகத்தில் வளர்ந்தார். அதனால், சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்து கொண்டிருந்த கங்குலியின் சகாப்தம் 2007 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
பின்னர், இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு வந்த தோனி, 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என்று மொத்தம் 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
தோனிக்கும் கங்குலிக்கும் எப்போதுமே ஒரு மறைமுகமான பனிப்போர் இருந்து வந்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக 2017 ஆம் ஆண்டு, ஒரு பேட்டியில், "தோனி 20 ஓவர் போட்டிகளுக்கு சிறந்த வீரர்தானா?" என கங்குலி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய தோனி, அதன் பின் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். மேலும், சில தினங்களுக்கு முன் வெளியாகிய இந்திய அணியின் ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லாதது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதன் மூலம், தன்னுடைய 13 ஆண்டு கால பகையை சாதுர்யமாக கங்குலி தீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், தோனி தற்போது ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.