‘கடைசி 5 ஓவர்தான் எங்க டார்கெட்’.. ‘நாங்க ப்ளான் பண்ண மாதிரியே நடந்துச்சு’.. வெற்றி சீக்ரெட் சொன்ன ராகுல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 96 ரன்களும், விராட் கோலி 78 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டரில் இறங்கிய கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அசத்தினார். இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எல்.ராகுல், முதலில் பேட்டிங் செய்ய தயாரன போதே நாங்கள் ஒரு திட்டம் வகுத்துவிட்டோம். அது கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதுதான். அதன்படி 50 ஓவர்களில் எப்படியாவது 320 முதல் 330 ரன்களை எடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்தோம். இந்த இலக்கை அடைய கோலி மற்றும் மனிஷ் பண்டேவின் விக்கெட்டை முன்கூட்டியே இலக்கக் கூடாது என தீர்மானித்தோம். இதில் எதிர்பார்த்ததுபோல கோலி சிறப்பாக ஆடினார்.
மேலும் ஜடேஜாவும் தன் பங்கிற்கு பவுண்ட்ரிகளை அடித்து ரன்களை சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் தவான் சிறப்பாக விளையாடியதால் எங்களுக்கு சற்று எளிதாக அமைந்தது. இதனால் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக ரன்களை சேர்க்க முடிந்தது. தொடர்ந்து பேசிய அவர், பிற அணிகளில் உள்ள மிடில் ஆர்டர் வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங் செய்யும் வீடியோக்களைப் பார்த்து எனது பேட்டிங்கை சரி செய்தேன். இதனால் என் ஆட்டம் சற்று மேம்பட்டுள்ளது என ராகுல் தெரிவித்தார்.
