"நீங்க இப்போவும் 'நம்பர் 1' டீம் தான்... அதுக்காக இத மட்டும் செஞ்சுடாதீங்க.." 'மும்பை' அணிக்கு 'வார்னிங்' கொடுத்த 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநீண்ட காத்திருப்புக்கு இடையே, 14 ஆவது ஐபிஎல் சீசன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதுவரை நடந்து முடிந்த 13 சீசன்களில், மும்பை அணி 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. அது மட்டுமில்லாமல், கடந்த இரண்டு சீசன்களிலும், தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த முறையும், முன்பை விட அதிக பலத்துடன் மும்பை அணி விளங்கும் நிலையில், 6 ஆவது முறையாக அவர்கள் கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக பலர் கணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா (Pragyan Ojha) கூறுகையில், 'மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம் போல இந்த தொடரிலும் பலம் கொண்ட அணியாக தான் திகழ்கின்றன. கடந்த இரண்டு வருடத்திற்கான மும்பை அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் கூட, மும்பை அணிக்கு அதிக அளவிலான வீரர்கள் தேவைப்படவில்லை.
அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடி வரும் நிலையில், கடந்த இரண்டு வருடமும் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி, தற்போதும் நம்பிக்கை வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஆனால், மும்பை வீரர்களிடம் நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அதீத நம்பிக்கை இருக்கக் கூடாது' என ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
மேலும் பேசிய ஓஜா, 'ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் வெற்றி என்பது, அந்த அணியிலுள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பிலும் உள்ளது. ஒவ்வொரு வீரருக்கு இடையில், நல்ல புரிதல் ஏற்பட்டாலே, அந்த அணிக்கு அது மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தும். ஆனால், வீரர்களுக்கு இடையே ஏற்படும் புரிந்துணர்வு தான் சவாலான விஷயம்' என கூறியுள்ளார்.