"இப்டி தான் நடக்கும்ன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்... இதுனால நான் ஒன்னும் பெருசா 'ஷாக்' ஆகல.. 'ஐபிஎல்' ரகசியம் உடைக்கும் 'மேக்ஸ்வெல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 14 ஆவது ஐபிஎல் சீசன் நாளை ஆரம்பமாகவுள்ளதையடுத்து, இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இதில், மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த இரண்டு சீசன்களிலும் கோப்பையை கைப்பற்றி, பலம் வாய்ந்த அணியாக திகழும் நிலையில், மறுபக்கம் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
முன்னதாக, இந்த சீசனுக்கான மினி ஏலத்தில், மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், கைலி ஜேமிசன் உள்ளிட்ட வீரர்களை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதில், அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை அணியில் எடுக்க, சென்னை மற்றும் பெங்களூர் அணிகளிடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில், பெங்களூர் அணி அவரை 14.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிய மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி, சுமார் 100 ரன்கள் வரை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக நடந்த இந்திய அணிக்கு எதிரான தொடரில், மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அசத்தியிருந்தார். இதனால், சொந்த அணிக்காக மட்டும் சிறப்பாக ஆடுவார் என்பது போன்ற விமர்சனங்கள் அவரைச் சுற்றி வலம் வந்தது.
இதன் காரணமாக, பஞ்சாப் அணி அவரை விடுவித்ததும், மற்ற அணிகள் அவரை எடுப்பதில் அதிகம் ஈடுபாடு காட்டாது என்றே அனைவரும் கருதினர். ஆனால், யாரும் நம்ப முடியாத வகையில், அதிக தொகை கொடுத்து பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், இதுபற்றி பேசிய மேக்ஸ்வெல் (Glenn Maxwell), 'நான் அதிக தொகைக்கு ஏலம் போனது எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், ஒரு சில அணிகள் ஆஃப் ஸ்பின் பவுலிங் போடத் தெரிந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எதிர்நோக்கியிருந்தது எனக்கு ஏற்கனவே தெரியும்.
இதனால், நான் அதிக தொகைக்கு ஏலம் போவது என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். இரண்டு அணிகள் என்னை எடுக்க கடுமையான போட்டி போட்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இறுதியில், ஆர்சிபி அணி என்னை எடுத்தது' என கூறியுள்ளார்.