"இவருக்கு எல்லாம் எதுக்குங்க இவ்ளோ 'பில்ட் அப்'.. அப்டி என்னத்த பண்ணிட்டாரு?.." 'மேக்ஸ்வெல்'லை விளாசித் தள்ளிய முன்னாள் 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடவுள்ளார்.
கடந்த சீசனில், பஞ்சாப் அணிக்காக ஆடிய மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி, 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், அவரது மோசமான ஃபார்மைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் அணி, ஏலத்திற்கு முன்பாக அவரை விடுவித்தது.
தொடர்ந்து, இந்த சீசனில், பெங்களூர் அணி அவரை, 14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவரை 8 ஐபிஎல் சீசன்களில் பங்கேற்றுள்ள மேக்ஸ்வெல், இரண்டு சீசன்களில் தான் அருமையாக ஆடியுள்ளார். அதிலும், கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் தொடரில் 552 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
ஆனால், அதன் பிறகு பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை மேக்ஸ்வெல் ஏற்படுத்தவில்லை. ஆனாலும், அவருக்கான மவுசு குறையவில்லை. மிகப் பெரிய தொகையைக் கொடுத்து பெங்களூர் அணி மேக்ஸ்வெல்லை ஏலத்தில் வாங்கியதே இதற்கு உதாரணம்.
இந்நிலையில், இதுபற்றி பேசிய முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர், 'ஒரு வீரர் தொடர்ந்து சொதப்பினால், எப்படி அவர் மீது அணி நம்பிக்கை வைக்கும். அது தான் மேக்ஸ்வெல்லின் கதையும். இதனால் தான தொடர்ந்து அணி மாறிக் கொண்டே இருக்கிறார் மேக்ஸ்வெல். கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் ரசலை பாருங்கள். அவரும் மேக்ஸ்வெல் மாதிரி பவர் ஹிட்டர் தான்.
தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரசல், கொல்கத்தா அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார். ஆனால், மேக்ஸ்வெல் தனது மோசமான ஃபார்மின் காரணமாக, அணி மாறிக் கொண்டே இருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய சொதப்பல் பேட்டிங் தான்.
ஒவ்வொரு முறையும் அதிக தொகைக்கு ஏலம் போகும் மேக்ஸ்வெல், அந்த அணி நிர்வாகத்தை ஏமாற்றாமல், அதிரடியாக ஆடி தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், வேறு அணிக்கு மாற வேண்டிய நிலை ஏற்படலாம். சில நேரம் வேறு அணிகள் அவரை ஏலத்தில் எடுக்காமல் கூட போகலாம்' என கம்பீர் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.