சத்தமே இல்லாம முடிந்த நிச்சயதார்த்தம்.. ரசிகர்களுக்கு ‘செம’ சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே வீரர்.. ஆனா ‘கல்யாணம்’ இப்போ இல்லையாம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் (Shardul Thakur). தற்போது இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தி வருகிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷர்துல் தாகூர், இதுவரை 15 ஒருநாள், 23 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் தொடருக்கான இந்திய அணியிலும் ஷர்துல் தாகூர் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் இன்று (29.11.2021) தனது நீண்ட நாள் காதலியான மித்தாலி பருல்கர் என்பவருடன் ஷர்துல் தாகூருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உட்பட 75 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தம் மட்டுமே தற்போது நடைபெற்றுள்ளது. திருமணம் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்புதான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அடுத்து ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு இளம் வீரரான தீபக் சஹார், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது மைதானத்தில் வைத்து தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார். இது அப்போது இணையத்தில் வைரலானது. அதனால் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக ஷர்துல் தாகூர் சத்தமே இல்லாமல் தனது காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்
