'இளம்' வீரருக்கு 'கோலி' பெயரில் வந்த 'மெசேஜ்'... "அத நம்பாம நான் பாத்த வேல இருக்கே..." அவரே பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த நிலையில், ஐபிஎல் தொடர் எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், இந்த ஏலத்தில் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள், அதிக தொகைக்கு ஏலம் போயினர். மேலும், முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இந்திய இளம் வீரர்கள் சிலரை எடுக்கவும் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இதில், ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக நடைபெற்றிருந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில், கேரள வீரர் முகமது அசாருதீன் அதிரடியாக ஆடியிருந்தார். அதிலும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளில் அவர் 137 அடித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் அவர் பெற்றிருந்தார்.
அசாருதீனின் அதிரடி ஆட்டத்தின் காரணத்தால், நிச்சயம் அவர் ஐபிஎல் தொடரிலும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்த்தனர். அதன்படி, நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், கோலி தலைமையிலான பெங்களூர் அணி அவரை வாங்கியது. இதுகுறித்து மகிழ்ச்சியில் திளைத்துள்ள கேரளா வீரர் அசாருதீன், பெங்களூர் அணியில் தான் தேர்வானது குறித்து மனம் திறந்துள்ளார்.
'ஏலத்தில் நான் பெங்களூர் அணிக்காக தேர்வான அடுத்த இரண்டு நிமிடங்களில், 'ஆர்சிபி அணிக்கு உங்களை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள், நான் கோலி' என ஒரு மெசேஜ் வந்தது. முதலில் அதனைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கோலியுடைய எண் தானா என்பதை நான் முதலில் நம்பாததால், உடனடியாக அந்த மெஸேஜிற்கு பதிலளிக்கவில்லை. அந்த எண் கோலியுடையது தான் என்பதை அறிய, சஞ்சு சாம்சனிடம் கேட்டு உறுதி செய்தேன். அதன் பிறகு தான், அந்த மெஸேஜிற்கு பதிலளித்தேன்.
கோலி எனக்கு மெசேஜ் செய்வார் என கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இருந்து வந்த மெசேஜ், எனக்கு பெரிதாக தெரிந்தது. ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளவும், அவர் சந்திக்கவும் மிகவும் ஆவலாக உள்ளேன்' என உற்சாகத்துடன் அசாருதீன் கூறியுள்ளார். ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆட வேண்டும் என்றும், விராட் கோலியின் தீவிர ரசிகன் என்றும் அசாருதீன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.