"இன்னொரு நடராஜனா...?" ..இந்திய டெஸ்ட் அணியில்... முதல் முறையாக இடம் பிடித்து... திடீரென டிரெண்டாகும் இளம் வீரர்... யார் இவர்? அணியில் இடம் பிடித்தது எப்படி??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஜூன் மாதம் 18 ஆம் தேதி, இங்கிலாந்தில் வைத்து நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியை சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்திருந்தது. அது மட்டுமில்லாமல், இங்கிலாந்து அணிக்கு எதிராக, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் சேர்த்து இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.
மொத்தமாக 20 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ள நிலையில், கூடுதல் வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் அர்சான் நக்வஸ்வாலா ஆகிய 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், அபிமன்யு ஈஸ்வரன் உள்ளிட்டோர் ஓரளவுக்கு பரிச்சயமான வீரர்கள் என்றாலும், மற்றொரு இளம் வீரரான அர்சான் நக்வஸ்வாலா (Arzan Nagwaswalla) யார் என்பதை தேடி வருகின்றனர் இந்திய ரசிகர்கள்.
23 வயதேயாகும் இடது கை பந்து வீச்சாளரான அர்சான் நக்வஸ்வாலா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு, லிஸ்ட் A போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய அர்சான், அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால், அடுத்தடுத்த தொடர்களில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு சையது முஷ்டாக் அலி தொடரில், தமிழக அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்தார்.
அதன் பிறகு, ரஞ்சிக் கோப்பைத் தொடரில், குஜராத் அணிக்காக ஆடிய அர்சான், 2021 ஆம் ஆண்டுக்கான சையத் அலி முஷ்டாக் தொடரிலும் பங்கேற்றிருந்தார். இதில், 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய அர்சான், தொடர்ந்து நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இதன் காரணமாக, இந்திய அணியின் தேர்வுக் குழுவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த அர்சான், தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் கூடுதல் வீரராக தேர்வாகியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வலைப்பந்து வீச்சாளராக சென்றிருந்த நிலையில், சில வீரர்கள் காயமடைந்ததன் காரணமாக, மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
இதனை பயன்படுத்திய நடராஜன், தனது முத்திரையை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பதித்திருந்தார். தற்போது, அவரைப் போல இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்சான் நக்வஸ்வாலாவும், கூடுதல் வீரராக இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள நிலையில், தனக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், நடராஜனைப் போல இவரும் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
