'அடி மேல அடி'... இருந்தாலும் 'நான் எழும்பி வருவேன்'... 'உலகக்கோப்பை'யில் இணைந்த 'இந்திய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 18, 2019 11:08 AM
ஐபிஎல் போட்டியில் காயமடைந்த இந்திய வீரர் கேதர் ஜாதவ் குணமடைந்ததால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன.இந்த போட்டிக்கான வீரர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி, விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி 22ஆம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. 24 ஆம் தேதி அங்கு பயிற்சிப் போட்டிகள் தொடங்குகின்றன.
இதனிடையே உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய அவருக்கு தீவிர சிகிச்சை மற்றும் ஓய்வு அளிக்கப்பட்டது.இதனால் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.அவர் விளையாடாத பட்சத்தில்,ராயுடு, ரிஷாப் பண்ட் உள்ளிட்ட வீரர்களை பரிசீலிக்கலாம்என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இதனிடையே அவருடைய உடல்நிலையை தீவிரமாக கவனித்து வந்த இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட், கேதர் காயத்திலிருந்து மீள்வதற்கான பல பயிற்சிகளை வழங்கி வந்தார்.இதையடுத்து கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில்,அவர் பூரணமாக குணமடைந்து விட்டதாகவும், 22- ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் அவரும் செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிசிசிஐ இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் வெளியிடாத நிலையில்,இன்று அது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டரில் கச்சிதமாக விளையாடக்கூடிய ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ்,59 போட்டிகளில் விளையாடி 1174 ரன்கள் சேர்த்துள்ளார்.இதில் இரண்டு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடங்கும்.காயத்திற்கும் கேதருக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை,அந்த அளவிற்கு காயத்துடன் போராடி வந்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் குணமடைந்து ஆசிய கோப்பைப் போட்டியில் பங்கேற்றார். அடுத்தும் காயமடைந்தார்.பின்னர் மீண்டும் வந்து இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். அதிலும் காயம் அடைந்த அவர்,மீண்டும் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.