'பாக்கத்தானே போறீங்க கோலியோட ஆட்டத்த'... 'விராட் கோலியை புகழ்ந்த பிரபல வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | May 15, 2019 02:56 PM

வரும் மே 30-ம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து நாட்டு வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் தற்போதுதான் ஐ.பி.எல். தொடரை முடித்தனர். விரைவில் இந்திய அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.

ganguly urges critics not to compare kohli\'s ipl captaincy record

உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,  இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் பெரிதும் போட்டி காணப்படுகிறது. இந்திய அணி விராட் கோலி தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியை களம் காண உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன்ஷிப் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. 

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், 'ஐ.பி.எல். தொடருக்கும், உலகக்கோப்பைக்கும் எந்தவித தொடர்பில்லை. விராட் கோலியின் ஐ.பி.எல். அனுபவங்கள் எக்காரணம் கொண்டும், உலகக்கோப்பையை பாதிக்காது என நான் கருதுகிறேன். ஒருநாள் போட்டிகளில் கோலியின் சாதனைகள் இதுவரை சிறப்பாகவே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் தோனியின் அனுபவம், ரோஹித் ஷர்மாவின் துணை ஆகியவை கோலிக்கு பக்கபலமாக இருக்கும். இந்த மூவர் கூட்டணியை வெல்வது கடினமே. அதுபோல  ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்' எனக் கூறினார்.

மேலும் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்படி இருக்கும் எனக் கேட்ட போது, 'இங்கிலாந்து மைதானத்தில் பாகிஸ்தான் எப்போதும் சிறப்பாகவே விளையாடும் என்பது அவர்களது கடந்தகால சாதனைகளை பார்த்தாலே நமக்கு தெரியும். இருந்தாலும் கோலி, தவான், தோனி, ரோஹித் போன்ற வீரர்களை வைத்திருக்கும் இந்தியாவை அவ்வளவு எளிதாக அவர்கள் வீழ்த்த முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #INDIATEAM