'இனிமே தான் சிறப்பான தரமான சம்பவங்கள பார்க்கப்போறீங்க!'... 'இந்த மூனு டீம் ஃபேன்சும் செம்ம வெறில இருக்காங்க!'... ஐபிஎல் ஃபீவரால் தவிக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவருகின்ற மார்ச் 29ம் தேதி முதல் ஐபிஎல் தொடங்கவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மோகத்தை வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. தோனி, கோலி, ரோகித் என மாமன்-மச்சான் போல் கைகோர்த்துக்கொண்டு இந்திய அணிக்காக உருகும் ரசிகர்கள் நாடெங்கும் இருக்கிறார்கள். ஆனால், ஐபிஎல் என்று வந்துவிட்டால் பங்காளிகள் சண்டை போடுவது போல், தோனிடா, கோலிடா என்று அடித்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு ஐபிஎல் என்பது ரசிகர்களிடையே வரவேற்பு மிக்க கிரிக்கெட் தொடராக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கோடைக் கால கொண்டாட்டமாகவே மாறிப்போன ஐபிஎல், இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புடன் ஐபிஎல் தொடங்கும் என்றாலும், இந்த வருடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பும் ஒற்றை மனிதருக்காத் தான். மகேந்திர சிங் தோனி.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனியை, அதற்கு பின் எந்தப் போட்டியிலும் ரசிகர்கள் பார்க்கவில்லை. தோனியின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதைக் காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்கள் இப்படியொரு மனநிலையில் இருக்க, கோலியின் ரசிகர்கள் 'ஈ சாலே கப் நமதே' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் பெங்களூர் அணி, இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறது. அந்த அணியின் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், லோகோ மாற்றம், பெயர் மாற்றம் என அதிரடி காட்டிவருகிறது பெங்களூர் அணி நிர்வாகம்.
மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் அதிரடி ஆட்டங்களால் கவனம் ஈர்த்த ரோகித் சர்மாவின் தலைமையில் மும்பை அணி களம் காணுகிறது. கடந்த முறை கோப்பையை வென்ற அணி என்பதால், அதே வேகத்துடன் இந்த முறையும் களம் இறங்கவுள்ளது.
இதற்கிடையில், வரும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே சென்னை-மும்பை என்பது இன்னும் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. மற்ற அணி ரசிகர்களும் இதே போன்று ஐபிஎல்லை எதிர்பார்த்து காத்திருப்பதால், வரும் ஐபிஎல்லில் சுவாரஸ்யத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது என்பதை உறூதியாக கூறலாம்.