ஏன் தம்பி! எனக்குன்னே 'கெளம்பி' வருவீங்களா?... இளம்வீரரின் 'செயலால்'... நொந்து, 'நூடுல்ஸ்' ஆன கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபயிற்சி போட்டியில் சொதப்பிய இளம்வீரரை பார்த்து இந்திய கேப்டன் விராட் கோலி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டி20, ஒருநாள் தொடரை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. ஒருநாள் தொடரை இழந்ததால் டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. இதனால் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கலாம் என இந்திய அணி திட்டமிட்டு இருந்தது.
ஆனால் முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் 1 ரன், பிரித்வி ஷா டக் அவுட், ஷுப்மன் கில் டக் அவுட், ரிஷப் பண்ட் 7 ரன்கள் என அனைவரும் சொதப்பினர். 2-வது இன்னிங்சில் பிரித்வி ஷா 39 ரன்கள் எடுக்க, ஷுப்மன் வெறும் 8 ரன்களில் அவுட் ஆனார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக சதம், இரட்டை சதம் அடித்து மிரட்டிய கில் பயிற்சி போட்டியில் படுமோசமாக சொதப்பி இருக்கிறார்.
இதனால் பிரித்வி ஷாவுடன் இணைந்து மயங்க் அகர்வால் ஓபனிங் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் தான் இந்திய அணி தன்னுடைய நம்பர் 1 அந்தஸ்தை தக்க வைக்க முடியும் என்பதால், இதில் கோலி தேவையில்லாத ரிஸ்க் எடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறி தான்.
இதேபோல 2-வது இன்னிங்சில் 60 ரன்கள் எடுத்தாலும் விக்கெட் கீப்பராக அனுபவம் மிகுந்த சஹா இருப்பதால் பண்டுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம் தான். எனினும் கேப்டனாக கோலியும், இந்திய தேர்வுக்குழுவினரும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மறுபுறம் கே.எல்.ராகுல் பெயர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என ரசிகர்கள் இந்திய தேர்வுக்குழுவினரை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
