'கூட வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லாரும் கிளம்பிட்டாங்க!.. மைக் ஹசி மட்டும் சிக்கிட்டாரு'!.. 'ஸ்பெஷல் ப்ளான்' வைத்துள்ள சிஎஸ்கே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹசியின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் வருண் சக்கரவர்த்தியிடம் தொடங்கிய கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து வேகமாக பரவி வருகிறது. தற்போதுவரை வீரர்கள், பயிற்சியாளர், ஊழியர்கள் என 8 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி மாலத்தீவு, இலங்கை ஆகிய இடங்களுக்கு கிளம்பி வருகின்றனர். இதனிடையே மைக்கேல் ஹசிக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா உறுதியாகியுள்ளதால் அவர் என்ன செய்யப்போகிறார் என கேள்வி உலா வந்தது.
இந்நிலையில், மைக்கேல் ஹசி இந்தியாவில் தான் இருக்க போவதாகவும், அவர் நலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு அவர் டெல்லியில் உள்ள ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்படவுள்ளார். அதன் பின்னர் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததும் தாய் நாடு திரும்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், மைக்கேல் ஹசியை சிஎஸ்கே அணி நிர்வாகம் சிறந்த முறையில் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். எனவே, விரைவில் அவர் நலம் பெற்று திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மே 15 வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் மாலத்தீவு, இலங்கையில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், தாங்கள் தாய் நாடு திரும்ப பிசிசிஐ ஏதாவது ஏற்பாடு செய்யும் என்ற நம்பிக்கையுடன் காத்துள்ளனர். மைக்கேல் ஹசி 10 நாட்களுக்கு பிறகு குணமடைந்தால் நேராக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கலாம்.

மற்ற செய்திகள்
