'ஆன்லைன் வீடியோ கால்!.. பதறியடித்து ஓடிவந்த அணி நிர்வாகிகள்'!.. வெறும் 10 நிமிடத்தில் ஐபிஎல்-ஐ கேன்சல் செய்த பிசிசிஐ!.. திடுக்கிடும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதற்கு முன்னர் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு மத்தியிலும் பிசிசிஐயின் பாதுகாப்பு வழிமுறைகளோடு ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் வீரர்கள் சிலருக்கு கொரோனா பாதித்தபோதும், போட்டிகள் தொடர்ந்து நடக்கும் என திட்டவட்டமாக இருந்த பிசிசிஐ நேற்று தனது முடிவை மாற்றியது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே தேவ்தத் பட்டிக்கல், அக்சர் பட்டேல், நிதிஷ் ராணா உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா பாதித்தது. எனினும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (மே 3) கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதியானது.
ஸ்கேன் எடுக்க மருத்துவமனை சென்ற வருண் சக்ரவர்த்தி, தன்னை தனிமைப்படுத்தாமல் மீண்டும் அணியின் பபுளில் இணைந்தார். இதனால் வீரர்களிடையே பதற்றம் நிலவியது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் 3 பேருக்கு, டெல்லி அணியின் அமித் மிஸ்ரா, ஐதராபாத்தில் விருத்திமான் சஹா என அடுத்தடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் போட்டிகள் தொடர்ந்து நடக்கும் என பிடிவாதமாக இருந்த பிசிசிஐ, இந்த ஒத்திவைக்கும் முடிவை வெறும் 10 நிமிடங்களில் எடுத்துள்ளது. பாதிப்பு அதிகரிக்கும் செய்திகள் அறிந்தவுடன் ஐபிஎல் கவுன்சில் கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து அணிகளின் அதிகாரிகளும் உடனடியாக இணைந்துள்ளனர்.
கூட்டத்தில் ஒரு அணியை சேர்ந்தவர் மட்டும் ஐபிஎல் தொடர்ந்து நடக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். ஆனால், மற்ற அனைவரும் வீரர்களின் பாதுகாப்பு மட்டுமே தற்போது மிகவும் முக்கியமானது. போட்டிகள் தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஆனால், அடுத்த கட்டமாக பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு நோய் தொற்று மிக அதிகமாக உள்ளது. எனவே, வீரர்களை அங்கு அனுப்பி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
கடந்த 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. மீதமுள்ள 31 ஆட்டங்கள் தடைபட்டுள்ளன. எனினும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.