"'இந்தியா' எனக்கு எப்போவும் 'ஸ்பெஷல்'.. அதுக்காக இது கூட பண்ணலன்னா எப்படி??.." 'சிஎஸ்கே' வீரர் செய்த 'உதவி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில், தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம், கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், ஒரு நாளிற்கு சுமார் 4 லட்சம் பேர் வரை, இந்த தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, நாடு முழுவதும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபரகணங்களின் தட்டுப்பாடும், அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரும், சில அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஆடவிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் (Jason Behrendorff), இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், தன்னாலான நன்கொடையை அளிக்கவுள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை வழங்குவதற்காக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துடன் இணைந்து, UNICEF தொண்டு நிறுவனம் உதவ முன் வந்துள்ளது.
இதில், தன்னால் முடிந்த சிறிய நன்கொடையை அளிக்க முன் வந்துள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட பெஹ்ரன்டார்ஃப், 'மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல, எனக்கும் இந்தியா மிக ஸ்பெஷலான இடம் தான். இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவது என்பது, உலகில் எங்கும் கிடைக்காத அனுபவமாகும். அப்படிப்பட்ட இந்தியாவில், தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க, மிகவும் கொடூரமாகவும், அதே நேரத்தில் வருத்தமாகவும் உள்ளது.
— Jason Behrendorff (@JDorff5) May 4, 2021
இந்தியாவில் மக்கள் இருக்கும் நிலையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதனால், என்னாலான உதவியை, இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்காக நான் செய்ய விரும்புகிறேன். இதற்காக, UNICEF நன்கொடை திட்டத்தின் கீழ், என்னாலான உதவியைச் செய்துள்ளேன். என்னைப் போல மற்றவர்களும், தங்களாலான உதவியைச் செய்ய முன் வர வேண்டும். நான் செய்த உதவி சிறியது என்று எனக்கு தெரியும்.
பல ஆண்டுகளாக, என்னிடமும், எனது குடும்பத்தினரிடமும் இந்தியா காட்டிய அன்பிற்கு முன்பு, இது நிச்சயம் பொருந்தாது தான். ஆனால், ஒரு சிறிய வித்தியாசத்தை எனது உதவி ஏற்படுத்தும் என நம்புகிறேன்' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அணியில் இடம்பெற்றிருந்த ஹேசல்வுட் இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜேசன் பெஹ்ரன்டார்ஃப்பை, சென்னை அணி மாற்று வீரராக எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
