'கிரிக்கெட் வீரர்னா... உங்க இஷ்டத்துக்கு நடந்துக்குவீங்களா'?.. குல்தீப் யாதவ் மீது பாய்கிறது சட்ட நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் மீது கான்பூர் நிர்வாகம் அதிரடியான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உலகில் அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்த நாடாக இந்தியா மாறியுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஊரில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி குல்தீப் யாதவும் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் குல்தீப் யாதவ் தற்போது கான்பூரில் உள்ள தனது இல்லத்தில் உள்ளார். அவர் கடந்த மே 16ம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
அதில் தனது வீட்டின் புல்வெளியில் அமர்ந்திருக்கும் குல்தீப்பிற்கு, மருத்துவ ஊழியர் ஒருவர் தடுப்பூசி செலுத்துகிறார். ஆனால், இதுதான் சர்ச்சையை கிளப்பியது. கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என அனைவரும் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று தடுப்பூசியை போட்டுக்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் குல்தீப் யாதவ், தனக்கான தடுப்பூசிக்காக கான்பூரில் உள்ள ஜகேஷ்வர் மருத்துவமனையில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு சென்று போட்டுக்கொள்ளாமல் தனது செல்வாக்கை பயன்படுத்தி, விருந்தினர் பங்களாவில் இருந்தவாரே தடுப்பூசியை வரவழைத்து போட்டுக்கொண்டுள்ளார் எனக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள நாடு முழுவதும் மருத்துவமனை வாயில்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், குல்தீப் யாதவுக்கு மட்டும் எப்படி வீட்டிற்கே தடுப்பூசி சென்றது என நெட்டிசன் பொங்கி வெடித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரிதாகிய நிலையில், தற்போது கான்பூர் மாவட்ட நீதிபதி ஆலோக் திவாரி சம்பந்தப்பட்ட அதிகாரி, இதுகுறித்து விரைந்து விசாரணை நடத்தவும், அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குல்தீப் யாதவ் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்வாகவில்லை. எனினும், அவர் அடுத்ததாக வரும் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கைகாகவே அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்
