'மீண்டும் இன்று மழை வருமா??'... 'எந்த அணிக்கு சாதகம்??'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 10, 2019 10:56 AM

மழை காரணமாக தடைப்பட்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான, அரையிறுதிப் போட்டியின் மீதமுள்ள ஆட்டம் இன்று தொடர உள்ளநிலையில், போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

india new zealand semi final match resume today

உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதலாவது அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று தடைப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை எடுத்தப்போது  மழை குறுக்கிட்டது.  ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலையில், சுமார்  4 மணிநேரத்திற்குப் பிறகு  ஆட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. களத்தில் ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், லாத்தம் 3 ரன்களுடனும் இருந்தனர்.

அதன்படி மீதமுள்ள 3.5 ஓவர்கள் இன்று வீசப்பட்டு முடிக்கப்படும்.  இதனையடுத்தே இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஒருவேளை இன்று மழை பெய்யாதப்பட்சத்தில்  இந்திய அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கும். மேலும் வழக்கம்போல் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கே போட்டி துவங்கிவிடும். இன்றைய போட்டியின் போதும் மழை பெய்யும் பட்சத்தில், டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு இந்திய அணிக்கு 46 ஓவர்களில் 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.

ஒருவேளை மழை அவ்வப்போது குறுக்கிட்டால், ஆட்டம் 20-ஓவர்களாக குறைக்கப்பட்டு, 148 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்படும். மழை காரணமாக இன்றைய ஆட்டமும் தடைப்படுமாயின், இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும். ஆனால் இன்று அங்கு பகலில் மழை  பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. பகலில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். மாலைநேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் போட்டி தடைப்பட வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.