'நம்மூருக்கு வராங்க.. 2 பேரையும் டீசன்ட்டா ட்ரீட் பண்ணனும்..ஓகே?'.. ரசிகர்களுக்கு வீரரின் அன்புக்கட்டளை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 21, 2019 05:31 PM
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி உலகக்கோப்பை போட்டி தொடர்பாக,, தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பரவலாகி வருகிறது.
உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து நாடுகளும் தங்கள் அணிகளை முழுவீச்சில் தயார் படுத்திக்கொண்டிருக்கின்றன. இதேபோல் உலகக்கோப்பை போட்டிகளுக்கென்றே இருக்கும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனிடையே உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது பெருமளவில் கவனத்துக்கு வந்தது. குறிப்பாக பந்தை சேதப்படுத்திய பஞ்சாயத்தில் தடை செய்யப்பட்டிருந்த வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் அணியில் இடம் பிடிப்பார்களா? என்பதே இந்த பரபரப்பு தொற்றியதற்குக் காரணம். ஆனால் பலரின் எதிர்பார்ப்புகள்படி, அவர்கள் இருவரும் அணியில் இணைக்கப்பட்டனர்.
இந்த ஐபிஎல் சீசன் 12-ல் செம்ம ஃபார்மில் இருந்த வார்னர் ஓராண்டுத் தடைக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளதால், அவரையும் ஸ்மித்தையும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது மன ரீதியாக ஸ்மித் மற்றும் வார்னரை அமைதியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கார்டியன் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, ஸ்மித்தும் வார்னரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும்போது ஸ்லெட்ஜிங் உள்ளிட்டவை தனிப்பட்ட ரீதியான மனம் புண்படும்படியான தாக்குதல்களை விளைவிக்கும் செயல்களைச் செய்யாமல் நல்லபடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் இங்கு முதலில் கிரிக்கெட்தான் என்றும் கூறியுள்ளார்.
எதிரும் புதிருமாக இருக்கும் இருவேறு நாட்டு கிரிக்கெட் அணிகளின் வீரர்களை தனிப்பட்ட முறையில் தாக்கக் கூடாது என்கிற மொயீன் அலியின் இந்த பாசிட்டிவான எண்ணம் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.