மீதி 'ஐபிஎல்' மேட்ச்'ச 'UAE'ல் நடத்த 'பிளான்' போடும் 'பிசிசிஐ'??.. "ஆனா அதுல தாங்க ஒரு பெரிய 'பிரச்சனையே' இருக்கு.." போட்டு உடைத்த 'ஆகாஷ் சோப்ரா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பயோ பபுள் விதிகளையும் மீறி, சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

முதலில் கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாக, அதன் பிறகு சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும், பாதிப்பு உறுதியானதால், ஐபிஎல் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும், மீதமுள்ள போட்டிகளை வேறு நாடுகளில் வைத்து நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து தான் நடைபெற்றிருந்தது. பயோ பபுள் விதிமுறைகளுக்கு வீரர்கள் உட்படுத்தப்பட்டு, மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்ததால், மீதமுள்ள போட்டிகளை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்தே நடத்தலாம் என்ற ஆலோசனையிலும் பிசிசிஐ உள்ளது.
இந்நிலையில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்துவதில் மிகப் பெரிய சிக்கல் ஒன்று உள்ளதாக, இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra) தெரிவித்துள்ளார். 'மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தால், பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும். இந்தாண்டின் டி 20 உலக கோப்பையும் அங்கேயே அக்டோபர் மாதத்திற்கு பிறகு நடைபெற, அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
அப்படி இருக்கும் போது, அங்குள்ள மூன்று மைதானங்களில், மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும், அதன் பிறகு 45 உலக கோப்பை போட்டிகளையும், இரண்டு மாத காலகட்டத்தில் நடத்துவது என்பது, நிச்சயம் அனைத்து பிட்ச்களையும் மோசமடையச் செய்யும். கண்டிப்பாக, இதனை ஐசிசி விரும்பாது. உலக கிரிக்கெட்டும் கூட இதனை விரும்பாது.
அப்படி ஒரு வேளை, ஐபிஎல் மற்றும் டி 20 உலக கோப்பை போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெறும் என்றால், மூன்று மைதானங்களில் ஒன்றான ஷார்ஜாவில், ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளை நடத்த வேண்டும். ஏனென்றால், ஷார்ஜாவில் பிட்ச்கள் மோசமாக நேரம் எடுக்கும். அதன் பிறகு, அபு தாபியிலும் இறுதியில் துபாய் மைதானத்திலும் போட்டிகளை நடத்த வேண்டும். அப்படி நடத்தும் போது, துபாய் பிட்ச் பெரிய அளவில் மோசம் அடைந்திருக்காது. டி 20 உலக போட்டிகளையும் துபாய் மைதானத்தில் இருந்தே தொடங்கலாம்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு டி 20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு இங்கு அதிகம் இருப்பதால், அதுவும் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது வேறு நாடுகளில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
