'இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள சிக்கல் வந்துடுச்சு'!.. அமீரகத்தில் ஐபிஎல் நடத்துவதில்... பிசிசிஐ-க்கு புதிய தலைவலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பெரும் சவால்கள் இருக்கின்றன.

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுக்கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் உள்ளன. இந்த போட்டிகளை நடத்தப்படாவிட்டால் ரூ.2500 கோடி வரை பிசிசிஐ-க்கு நஷ்டம்ஏற்படக்கூடும். ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆகவும் ( ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும்), 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்கள் என மொத்த 3 மைதானங்கள் மட்டுமே உள்ளன. வரவிருக்கும் நாட்களில் இங்கு பல்வேறு தொடர்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து செப்டம்பர் - அக்டோபர் மாத இடைவெளியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அதே போல ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகளை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால், டி20 உலகக்கோப்பை அமீரகத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை அமீரகத்தில் நடத்துவது உறுதியானால் அக்டோபர் 1ம் தேதி முதல் அமீரகத்தின் அனைத்து மைதானங்களையும் அதற்கு தருவதாக ஐசிசிக்கு அந்நாட்டு அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது. இதனால் பிசிசிஐ-க்கு செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல்-ஐ நடத்துவது பெரும் சிக்கலாக உள்ளது.
ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் அதிகளவில் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், சிக்ஸர்கள் பறக்கும் வகையிலும் தான் பிட்ச்-கள் ஏற்படுத்தப்படும். ஆனால், அமீரகத்தில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவில் போட்டிகள் நடைபெறுவதால் பிட்ச்-இன் தன்மையில் சேதம் இருக்கும் எனவும், அது ஐபிஎல் போட்டிகளில் பெரும் பிரச்சினையை உண்டாக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், ஐபிஎல் தொடர் அமீரகத்தில் தான் நடைபெறுகிறது என இன்னும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
