"எல்லாரும் 'ஐபிஎல்' வேணாம்'ன்னு சொல்றாங்க.. ஆனா, இதுல வந்த 'சம்பளத்துல' தான்.." 'இளம்' வீரர் சொன்ன 'விஷயம்'!.. மனதை கலங்கடித்த 'உண்மை'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி அணியைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதன் காரணமாக, ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுவதாக, பிசிசிஐ அறிவித்தது. மீதமுள்ள போட்டிகள் வேறு நாடுகளில் வைத்து நடைபெறலாம் என கருதப்பட்டு வரும் நிலையில், ஐபிஎல் அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.
அதே போல, இந்திய வீரர்களும், தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வரும் நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி, முத்திரை பதித்திருந்தனர். அதிலும் குறிப்பாக, ராஜஸ்தான் அணியில் ஆட தேர்வான இளம் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா (Chetan Sakariya), தோனியின் விக்கெட் உட்பட 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் ஆடி பட்டையைக் கிளப்பி வந்த சக்காரியாவை, 1.20 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. தற்போது, ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குஜராத் திரும்பியுள்ள சக்காரியா, கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தை இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தான் பங்குபெற்றது பற்றி பேசிய சேத்தன் சக்காரியா, 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், ஐபிஎல் தொடரின் எனது சம்பளத்திற்கான ஒரு பகுதி, சில தினங்களுக்கு முன் வந்து சேர்ந்தது. அதனை நேரடியாக எனது குடும்பத்தின் தேவைகளுக்காக அனுப்பி வைத்தேன். எனது குடும்பத்தின் கடினமான சூழ்நிலைகளின் போது, இந்த பணம் தான் உதவியது.
மக்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்த வேண்டும் என ஒருபக்கம் கூறுகின்றனர். நான் அவர்ளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது குடும்பத்திலேயே நான் மட்டும் தான் பணம் சம்பாதித்து வருகிறேன். அந்த வருவாயின் ஒரே ஆதாரம் கிரிக்கெட் மட்டுமே. ஐபிஎல் தொடரில் நான் சம்பாதித்த பணத்தின் மூலம் தான், எனது தந்தைக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும்.
அப்படிப்பட்ட ஐபிஎல் போட்டி இந்த ஒரு மாதமே நடைபெறாமல் போயிருந்தால், அது இன்னும் எனக்கு கடினமாக அமைந்திருக்கும். நான் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தை, தனது வாழ்நாள் முழுவதும் டெம்போ ஓட்டி வந்தார். ஐபிஎல் தொடர் மூலம் தான் எனது வாழ்க்கையே மாறப் போகிறது' என சேத்தன் சக்காரியா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
