இனி அணியில் விராட்டின் பங்களிப்பு என்ன..? புது கேப்டன் ஆனதும் கோலி பற்றி ரோஹித் சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டன் பதவியை ஏற்றபின் விராட் கோலி குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது. இதனை அடுத்து இந்த உலகக்கோப்பை தொடருடன் இந்தியா டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, டி20 அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக அழுத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று திடீரென ரோகித் சர்மா ஒருநாள் தொடருக்கான கேப்டனாக நியமித்து பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் இந்திய அணியில் விராட் கோலி இடம் குறித்து புதிய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், ‘விராட் கோலியின் பங்களிப்பு என்பது ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இவர் போன்ற ஒரு வீரர் எப்போதுமே அணிக்கு தேவை. ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடிய மிகப்பெரிய அனுபவம் அவரிடம் உள்ளது.
விராட் கோலி போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது கேப்டனாக எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் இருவரும் நிறைய கிரிக்கெட்டிகள் இணைந்து விளையாடியுள்ளோம். அதனால் இனி வரும் காலங்களில் நான் கேப்டனாக இருந்தாலும் கோலி எனக்கு மிகவும் உதவியாக இருப்பார். இக்கட்டான நேரங்களில் அணியை மீட்டெடுக்கும் தகுதி உடையவர் விராட் கோலி’ என ரோகித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.