T20 WC2022: "2016 FINALS தோல்விக்காக விமர்சிக்கப்பட்டவர்.. இப்போ ஒத்த ஆளா நின்னு ஜெயிக்க வச்சுருக்காரு"! மெச்சும் ரசிகர்கள்! BEN STOKES
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து & பாகிஸ்தான் அணிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் மசூத்- 38 (28) ரன்கள் எடுத்தார்.பாபர் - 32 (28) ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ரஷித் & ஜோர்டான் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
இரண்டாவது பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்க வீரர் ஹேல்ஸ் 1 ரனனில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பட்லர் 26 (17) ரன்கள் குவித்தார். மொயின் அலி 19 ரன்கள் குவித்தார். இறுதியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலககோப்பையை வென்றது. இங்கிலாந்து வீரர் சாம் கரண், ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்றதை அடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் செயல்பாடு குறித்து ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸின் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசி பிராத்வேத் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். அப்போது பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வென்று கொடுத்து காயத்துக்கு மருந்திட்டார்.
இச்சூழலில் இன்று நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைத்துள்ளார். 6 வருட காலத்தில் பென் ஸ்டோக்ஸ் செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் உருவெடுத்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடும் பென் ஸ்டோக்ஸ், ஐயன் போதம் வரிசையில் All Time Great லிஸ்டில் இணையவும் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்லும் பட்சத்தில் இதுவும் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.