‘இந்த ரெண்டு சம்பவத்தை மட்டும் என்னால மறக்கவே முடியாது’.. உருகிய ‘தல’ தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Nov 28, 2019 02:27 PM
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி, தன் வாழ்நாளில் மறக்க முடியாத இரு சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தனியார் நிறுவன கைக்கடிகாரம் அறிமுக விழாவில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இரண்டு மாடல் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்த அவர், தனது தலைமையிலான உலகக்கோப்பை போட்டிகள் குறித்து உருக்கமாக பேசினார்.
அதில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இரு நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பினோம். அப்போது திறந்தவெளிப் பேருந்தில் மும்பையை சுற்றி வந்தோம். மும்பை கடற்கரை பகுதிக்கு வரும்போது ஏராளமான கூட்டம் கூடியதால் போக்குவரத்து முடங்கியது. அப்போது பணிக்கு செல்பவர்கள், ரயில், விமானம் செல்பவர்கள் என பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டனர். ஆனால் ஒருத்தர் முகத்திலும் கோவம் இல்லை, புன்னகை மட்டுமே இருந்தது.
இரண்டாவதாக 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தோம். கடைசி நேரத்தில் வெற்றிபெற 15 முதல் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடலை பாடத் தொடங்கினர். அந்த நொடி என்னுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளும் மீண்டும் நடக்குமா என தெரியவில்லை. இந்த இரு சம்பவங்களும் என் மனதில் என்றும் நீங்காமல் இருக்கும் என தோனி உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார்.