‘இனி கிரிக்கெட் வீரர்களுக்கும் இது கட்டாயம்’... மத்திய அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 09, 2019 07:07 PM
தேசிய ஊக்கமருத்து தடுப்பு ஏஜென்சி கட்டுப்பாட்டுக்குள் வருவதால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் இனி ஊக்கமருத்து சோதனை நடத்தப்படவுள்ளது.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் மீது பிசிசிஐ.,க்கு, இதுவரை நம்பிக்கை இல்லாத காரணத்தால், மத்திய அரசு கட்டாயப்படுத்தும் எல்லைக்குள் பிசிசிஐ இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை மருந்து சோதனை செய்ய முடியாது என்றும் பிசிசிஐ கூறி வந்தது. இதற்கு சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு ஏஜென்சி கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவுக்கு பிசிசிஐ அடி பணிந்துள்ளது.
இதையடுத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போதை மருந்து சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. National Anti-Doping Agency (NADA) எனப்படும் தேசிய போதை மருந்து எதிர்ப்பு ஏஜென்சி விளையாட்டுத்துறையில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஏஜென்சிக்கு, சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு ஏஜென்ஸி (WADA) ஆலோசனைகளை வழங்கும்.
ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச ஊக்கமருந்து சோதனை மேலாண்மை நிறுவனம் என்பது பிசிசிஐ நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு வீரர்களிடம் இருந்து மாதிரிகளை எடுத்து வந்தது. இனிமேல் அந்தபரிசோதனைகள் அனைத்தும் நாடா பரிசோதனை செய்யும். இந்நிலையில் போதை மருந்து தடுப்பு சோதனையை தவிர்த்து வேறு வழி கிடையாது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் நிர்பந்தித்துள்ளது.
இதையடுத்து, இனிமேல் கிரிக்கெட் வீரர்களுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக விளையாட்டுத்துறை செயலர் ராதேஷ்யம் ஜூலானியா பிசிசிஐ-ன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜூலானியா, 'இனி கிரிக்கெட் வீரர்களுக்கும் போதை மருந்து சோதனை நடத்தப்படும். இனி பிசிசிஐ., இந்த ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. அனைவரும் இங்கு சமம் தான், எல்லாரும் ஒரே விதியை பின் பற்றியே ஆக வேண்டும்' என்றார்.