பாகிஸ்தான் வீரர் சொன்ன வார்த்தை.. அடுத்த செகண்டே புன்னகைத்த கோலி.. "ஊரே அதுக்கு தான் பாஸ் வெயிட்டிங்"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆரம்பமாகிறது.
ஆசிய கோப்பையில் பங்குபெற்றுள்ள அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள், 'குரூப் A'வில் இடம்பெற்றுள்ளது.
அது போல, 'குரூப் B'ல் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.
ஆசிய கோப்பையின் முதல் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகிறது. அதே போல, ஆசிய கோப்பையின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான போட்டி என்றால், அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான். இந்த இரண்டு அணிகளும், 28.08.2022 அன்று பலப்பரீட்சை நடத்துகின்றது.
இந்த போட்டியை ரசிகர்கள் பெரிய அளவில் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்திய ரசிகர்கள் பெரிதும் பேசி வரும் விஷயம், கோலியின் ஃபார்ம் குறித்து தான். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சதம் கூட அடிக்காமல் இருந்து வரும் கோலி, சமீபத்திய தொடர்களில், பெரிய அளவில் ரன் அடிக்காமலும் இருந்து வருகிறார். ஆசிய கோப்பையில் அவர் நிச்சயம் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பது தான் அனைவரின் உச்சகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே, ஆசிய கோப்பைக்காக இந்திய அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அங்கே பாகிஸ்தான் வீரரான ஷாஹீன் அப்ரிடியிடம் இந்திய வீரர்கள் நலம் விசாரித்தது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் அணி தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அப்ரிடி, காயம் காரணமாக ஆசிய கோப்பைத் தொடரில் இடம்பெறவில்லை. இதனிடையே, தற்போது தனது அணியினருடன் துபாயில் இருக்கும் ஷாஹீன் அப்ரிடியை அங்கே சென்ற இந்திய வீரர்கள் பலரும் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், கோலி மற்றும் ஷாஹீன் அப்ரிடி இடையே அப்போது நடந்த உரையாடல் தான், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில், ஷாஹீன் அப்ரிடிக்கு ஏற்பட்ட காயம் பற்றி கோலி கேட்க, தனது நிலை பற்றி ஷாஹீன் பதில் தெரிவிக்கிறார். தொடர்ந்து, இருவரும் பேசி முடியும் தருவாயில், கோலியை பார்த்து, "நீங்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்" என கூறினார். இதனைக் கேட்டதும் ஒரு நொடி சிரித்துக் கொண்டே நன்றி கூறி கடந்து சென்றார் கோலி.
The suspense is over! Let's listen to the conversation between @iShaheenAfridi and @imVkohli 🔊#AsiaCup2022 pic.twitter.com/ttVYLrNtuO
— Pakistan Cricket (@TheRealPCB) August 26, 2022
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கோலியின் பழைய பேட்டிங்கை பார்க்க ஆவலாக இருந்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரரும் அதனைக் குறிப்பிட்டு பேசியது தொடர்பான வீடியோ, தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.