ஒரு காலத்தில் 'ஆட்டோகிராப்' கேட்டு இந்த 'இடத்தில்' நின்றேன்.. மனந்திறந்த கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 13, 2019 04:55 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாள்தோறும் தன்னை மெருகேற்றிக்கொள்ளும் அவர் புதுப்புது சாதனைகளையும் படைத்து வருகிறார்.

Anushka Sharma kissing Kohli\'s hand during DDCA\'s ceremony

கடந்த 10 வருடத்தில் சர்வதேச அளவில் 20,000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த கோலியின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் ஒரு ஸ்டேண்டுக்கு விராட் கோலி பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மைதானத்துக்கு மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா நேற்று நடைபெற்றது. இதில் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன்  கலந்து கொண்டார்.விழாவில் தந்தை இறந்த நாளில் கிரிக்கெட் விளையாடிய கோலியை அருண் ஜெட்லி பாராட்டியதைக் கேட்ட அனுஷ்கா உணர்ச்சி வசப்பட்டு அவரது கையில் முத்தம் கொடுத்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தொடர்ந்து விழாவில் பேசிய கோலி,'' இந்த மாலை மறக்க முடியாத வகையில் எனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் இந்த மைதானத்துக்கு வைக்கப்பட்டுள்ளது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிறுவயதில் இருந்து எனக்கு ஆதரவளித்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எனது சிறுவயது கோச் ராஜ்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இன்று வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர்களுக்கு ஒரு கதை சொன்னேன்.2001-ம் ஆண்டில் இந்த மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த இடத்தில் நின்று வீரர்களிடம் ஆட்டோகிராப் கேட்டது எனக்கு நினைவு உள்ளது. 18 வருடம் கழித்து இந்த மைதானத்தின் ஒரு ஸ்டேண்டுக்கு எனது பெயர் வைக்கப்பட்டு இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது,'' என்றார்.