'கிரிக்கெட்' வீரர்கள் அடம் புடிக்குறதுக்கு 'இந்தியா' தான் காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 11, 2019 07:37 PM

தங்கள் நாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வர மறுப்பதற்கு இந்தியா தான் காரணம் என, பாகிஸ்தான் அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Pakistan minister blames India, after Sri Lanka players drop

இலங்கை கிரிக்கெட் அணி செப்டம்பர்  27-ம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு இருந்தது. இதற்கான வீரர்களும் இலங்கை அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.ஆனால்,திடீரென இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள 10 வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட முடியாது எனக்கூறி தொடரைப் புறக்கணித்துள்ளனர். இது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் நிலவும் பயங்கரவாத பிரச்சினைகளை காரணம் காட்டி, தாங்கள் கிரிக்கெட் விளையாட அங்கு செல்ல முடியாது என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் சம்மதிக்கவில்லை.லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே உள்ளிட்ட பத்து வீரர்களும் இந்த பயணத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில் இதற்கு இந்தியா தான் காரணம் என்று, பாகிஸ்தான் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடினால் உங்களை ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற்றி விடுவோம் என இந்தியா மிரட்டியதால் தான் இலங்கை வீரர்கள் எங்கள் நாட்டுக்கு வர மறுக்கிறார்கள் என தகவல் அறிந்த கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விண்வெளி தொடங்கி விளையாட்டு வரை தங்கள் மூர்க்கத்தனத்தை காட்டுகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்திய விளையாட்டுத் துறையில் உள்ள சில அதிகாரிகளின் செயல் மலிவாக இருக்கிறது,''என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு விளையாட சென்றனர்.அப்போது, வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது தலிபான் மற்றும் லஷ்கர் இ ஜான்வி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாகத்தான் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பதாக கூறப்படுகிறது.