"இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவருக்கே 'சான்ஸ்' குடுப்பீங்க??.." 'சட்டு புட்டு'ன்னு நல்ல முடிவா எடுங்க.." 'பஞ்சாப்' அணியின் முடிவால் கடுப்பான 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி, இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு, புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணியில் கே எல் ராகுல், மயங்க் அகர்வால் உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ள போதும், அந்த அணி பந்து வீச்சில் தான் அதிகம் சொதப்பி வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி 190 ரன்களுக்கு மேல் குவித்த போதும், டெல்லி அணி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. கடந்த சீசனிலும் சிறந்த அணியாக விளங்கிய பஞ்சாப் அணி, பந்து வீச்சு மற்றும் சில அதிர்ஷ்டம் கை கூடி அமையாத காரணத்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
அதே போல, பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள அதிரடி வீரர் கிறிஸ் கெயில் (Chris Gayle), இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில், 40 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். ஆனால், அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் முறையே 10, 11 மற்றும் 15 ரன்களே எடுத்திருந்தார்.
இந்நிலையில், கெயிலின் ஃபார்ம் பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் (Ajit Agarkar), 'முதல் போட்டியில் 40 ரன்கள் அடித்து அசத்தியிருந்த கெயில், அதன்பிறகு பெரிய அளவிலான தாக்கத்தை பேட்டிங்கில் ஏற்படுத்தவில்லை. கடந்த சீசனிலும், தான் களமிறங்கிய முதல் சில போட்டிகளில் இப்படி தான் ஆடினார். ஆனால், அதன் பிறகு நன்றாக ஆடியிருந்தார்.
அவரை அணியில் இருந்து வெளியே உட்கார வைப்பது கடினம் தான். ஆனால், இது போன்ற சமயங்களில், இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அவரை அணியில் இருந்து வெளியேற்றாமல் வைத்திருப்பீர்கள்?.
அதே போல, பஞ்சாப் அணியில் நிக்கோலாஸ் பூரனும், தொடர்ந்து ரன்களைக் குவிக்கத் தவறி வருகிறார். இது போன்ற சமயங்களில், வெளியே இருக்கும் இங்கிலாந்து வீரர் டேவிட் மலானை (David Malan) பஞ்சாப் அணி களமிறக்க வேண்டும்.
மொத்தமாக பார்த்தால், பஞ்சாப் அணி சிறப்பாக தான் பேட்டிங் செய்கிறது. ஆனால், கிறிஸ் கெயில் மட்டும் தான், சற்று மோசமாக ஆடி வருகிறார்' என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வீரரான டேவிட் மலான், சர்வதேச டி 20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
