‘இருப்பதோ 73 இடங்கள் தான்’... ‘விருப்பம் தெரிவித்த வீரர்களோ 971’... ‘இது ஐபிஎல் 2020 கலக்கல்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Dec 03, 2019 01:24 PM
2020 ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எத்தனை வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
13-வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் வெளியேற்றம் மற்றும் தக்கவைக்கும் பட்டியலை ஒவ்வொரு அணியும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதேபோல, ஏலத்திற்கு முன்பாக மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கிக்கொள்ளவும் இம்முறை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 71 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் வெளியேற்றப்பட்டு, மொத்தம் 127 பேர் தக்கவைக்கப்பட்டனர்.
மேலும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம், வழக்கமாக நடைபெறும் பெங்களூரை தவிர்த்து, முதன்முறையாக கொல்கத்தாவில், வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக வீரர்களின் பதிவு கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். சுமார் 13 மடங்கு அதிகம். இந்திய அணிக்காக விளையாடிய 19 வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 634 வீரர்கள் மற்றும் 11 வெளிநாடுகளை சேர்ந்த 258 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
971 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தாலும், 8 ஐபிஎல் அணிகளால் அதிலிருந்து 73 வீரர்களை மட்டுமே தேர்வு செய்யமுடியும். அந்த 73-ல் 29 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே, ஐபிஎல் 2020 போட்டிக்குத் தேர்வு ஆவார்கள். இந்த ஆண்டு நடைபெறும் ஏலம்தான், ஏற்கனவே இருக்கும் வீரர்களுக்கான கடைசி ஏலமாகும். ஏனெனில் 2021 ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில், அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு, புதிதாக வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆகிய 2 வீரர்கள், வரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.