'எவ்வளவோ அழுது கெஞ்சி பார்த்தும் விடல...' 'பிரசாதம் திருடியதாக சிறுவர்களை கட்டி வைத்து...' - அடித்து உதைத்தவர்கள் கைது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கோவில் வழிபாட்டிற்கு வைத்திருந்த பிரசாதத்தை இரு சிறுவர்கள் திருடியதாக கூறி, அவர்களை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம் குழந்தைகளோ அல்லது பறவைகளோ சாப்பிட்டால் இறைவனே வந்து சாப்பிடுவதாக கருதப்படும். மேலும் ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவு இறைவனுக்கு அளிக்கப்படும் உணவாகவே கருதப்படும் என பெரியோர்கள் சொல்லுவர்.
ஆனால் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இரு சிறுவர்கள் இறைவனுக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரசாதத்தை சாப்பிட்டதால் திருடர்கள் என கூறி கட்டிவைத்து அடித்துள்ள வீடியோ வைரலாகி உள்ளது.
மதுராவில் மாந்த் பகுதியில் உள்ள கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதன்காரணமாக பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரசாதமாக பழங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பிரசாதத்திற்காக வைக்கப்பட்டிருந்த பழங்களை 12 மற்றும் 10 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் திருடியதாக கூறப்படுகிறது.
சிறுவர்கள் எடுப்பதை கண்ட இருவர் அந்தச் சிறுவர்களை கட்டி வைத்து தாக்கியுள்ளனர். மேலும் தங்களை விட்டுவிடுமாறும் சிறுவர்கள் அழுது கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்கள் விடாமல் தொடர்ந்து தாக்கியிருக்கின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறுவர்களை தாக்கிய நபர்கள் இருவரையும் நேற்று மாலை மதுரா போலீசார் கைது செய்தனர். சிறுவர்களுக்கு நடந்த கொடூர செயலை குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், கைதானவர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.