ஹெலிகாப்டர் தரையிறங்குறப்போ போட்டோ எடுக்க முயற்சித்த இளைஞர்.. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. பதறிப்போன ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கிரீஸ் நாட்டில் ஹெலிகாப்டரின் இறக்கைகள் தாக்கியதில் 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கிரீஸில் உள்ள ஸ்பாட்டா விமான நிலையத்தில் ஜாக் ஃபென்டன் மற்றும் அவரது சகோதரி சென்ற விமானம் தரையிறங்கியிருக்கிறது. அப்போது, விமானத்தில் இருந்து கீழே இறங்கிய ஜாக், ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்குவதை பார்த்திருக்கிறார். உடனடியாக அதனை புகைப்படம் எடுக்க அதன் அருகில் ஜாக் சென்றதாக தெரிகிறது. அப்போது அவருடைய பின்னந் தலையில் ஹெலிகாப்டரின் இறக்கை மோதியிருக்கிறது.
சோகம்
இதுகுறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர்,"விமானத்தில் இருந்து கீழே இறங்கியவுடன் அவர் பின்பக்கமாக சென்றிருக்கிறார். அப்போது ஹெலிகாப்டரின் ரோட்டார் அவரது தலைமீது மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்" என்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கிரீஸின் விமான விபத்துக்களுக்கான குழுவின் தலைவர் அயோனிஸ் காண்டிலிஸ் பேசுகையில் ஜாக் போன் பேசியபடியே பின்புறமாக சென்றிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, தனியார் விமானத்தில் இருந்து இறங்கிய ஜாக் மற்றும் அவருடைய சகோதரி உள்ளிட்ட 3 பேர் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், அங்கிருந்து திடீரென வெளியேறிய ஜாக், ஹெலிகாப்டர் தரையிறங்குவதை பார்க்க ஆர்வத்துடன் சென்றிருக்கிறார். அப்போது அங்கேயே நிற்கும்படி அதிகாரிகள் ஜாக்கை நிறுத்த முயற்சித்திருக்கின்றனர். ஆனால், அதற்குள் ஹெலிகாப்டருக்கு அருகே ஜாக் சென்றிருக்கிறார். அடுத்த வினாடியே இறக்கை அவரது தலையில் மோதியிருக்கிறது.
அலெர்ட் செய்யப்பட்ட விமானி
இதனை தொடர்ந்து, ஜாக்கின் பெற்றோர் இருந்த வேறொரு ஹெலிகாப்டரின் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த இடம் பரபரப்பாக இருந்ததால் அருகில் இருந்த வேறு விமான நிலையத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இதனிடையே காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜாக் இங்கிலாந்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்ததும், விடுமுறைக்காக அவர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.