சென்னை விரைந்த சிபிசிஐடி போலீசார்.. ‘இனி அடுத்த கட்டம் அதுதான்’.. வேகமெடுக்கும் நாகர்கோவில் காசி வழக்கு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் காசி வழக்கில் முக்கிய ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி (27). இவர் மீது போக்சோ, கந்துவட்டி உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் காசியை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் மாணவிகள், இளம்பெண்கள், அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் என பலரிடம் காதலிப்பது போல் நடித்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து காசி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காசிக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய நிபந்தனை ஜாமீன் மூலம் தினேஷ் வெளியே வந்தார். முன்னதாக நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் அளித்த கந்துவட்டி புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி காசி மீது நாகர்கோவில் 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், காசி மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி சில முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை திரட்டியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காசி மீது பாலியல் புகாரை சிபிசிஐடி போலீசாரிடம் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் காசி மீது தனியாக ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் காசி மீது தற்போது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு மற்றும் சிபிசிஐடி போலீசார் தனியாக பதிவுசெய்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்குகளில் மேலும் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான குழு சென்னை விரைந்துள்ளது. அங்கு 2 குற்றப்பத்திரிகைகளும் இறுதி வடிவம் பெறுகின்றன. அந்த பணிகள் முடிந்தவுடன் அடுத்த வாரம் இந்த 2 குற்றப்பத்திரிகைகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News Credits: Dinakaran

மற்ற செய்திகள்
