"இங்க எதுவுமே சரியில்ல"... "எனக்காக, இந்த லெட்டர மட்டும் 'அவரு'கிட்ட சேத்துடுங்க"... 18 பக்க கடிதம் எழுதிவிட்டு... சிறுமி எடுத்த 'துயர' முடிவு!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 18 பக்க கடிதம் ஒன்றை எழுதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் அன்றைய தினம் இரவு 16 வயது பெண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக, அந்த சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு 18 பக்கத்திற்கு நோட்டு புத்தகம் ஒன்றில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தனது கோரிக்கைகள் மற்றும் விருப்பங்கள் பலவற்றை சிறுமி அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊழல் விவகாரம், மரங்களை வெட்டுவது குறித்தெல்லாம் அந்த சிறுமி கவலை தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை வைத்துள்ளார். அதோடு, முதியவர்கள் குறித்தும் கவலை கொண்டுள்ளார். 'இங்கு முதியவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களது பிள்ளைகளே அவர்களை கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள். இதனால் அவர்கள் கடைசி காலங்களில் வேதனைகளை அனுபவிக்கிறார்கள். பெற்றோர்களை பிள்ளைகளே முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இடத்தில் நான் இனி வாழ விரும்பிவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
'இது தான் எனது கடைசி ஆசை. இந்த கடிதம் பிரதமர் நரேந்திர மோடியின் கையில் சேர்த்து விடுங்கள்' என பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுமியின் இழப்பால் அவரது குடும்பத்தினர் கலங்கிப் போயுள்ளனர். மகளின் ஆசைப்படி அந்த கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்க்க வேண்டும் என சிறுமியின் தந்தை கண்ணீருடன் தெரிவிக்கிறார். மேலும், அந்த சிறுமிக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில், அதற்கான சிகிச்சையும் பெற்று வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
