'கொரோனா பரிசோதனைக்கு உண்மையான கட்டணம் என்ன?'.. நோயாளிகள் நலனுக்காக... சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளிகள் நலனுக்காக நிபுணர் குழுக்கள் மற்றும் மருத்துவமனைகளில் சி.சி.டி.வி. கேமராக்களை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதித்தோருக்கு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை கிடைக்க உறுதி செய்வது பற்றிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே. கவுல் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதனை காணொலி காட்சி வழியே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அனைத்து மாநிலங்களும் கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்கிறது என்பதனை உறுதி செய்யும் வகையில், நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இந்த குழு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்திட வேண்டும். இதுபற்றிய நீதிமன்ற உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும். கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுவதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை கட்டணங்கள் அனைத்து மாநிலங்களிலும் ஒரே அளவில் இருக்க வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,200 ஆக உள்ளது. வேறு சில மாநிலங்களில் ரூ.4,500 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் நலனை உறுதி செய்ய மருத்துவமனைகளில் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவுவது பற்றிய உத்தரவை பிறப்பிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை முறையாக பராமரிக்கின்றனர் என்பது உறுதி செய்யப்படும் வகையில், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி டெல்லி, மராட்டியம், தமிழகம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களுக்கு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

மற்ற செய்திகள்
