VIDEO: கார்ல கொரோனாவுக்கு பலியானவங்க ‘சடலம்’ இருக்கு சார்.. ‘சவப்பெட்டியை’ திறந்து பார்த்து மிரண்டுபோன போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து கொண்டு செல்வதாக கூறி போதைப்பொருள் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடாக பிரேசில் இருந்து வருகிறது. அந்நாட்டில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை கொண்டு செல்வதாக கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்திய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் மடோ க்ராஹோ டி சுலா மாகாணத்தின் பொன்டா போரா என்ற பகுதியில் போலீசார் வழக்கமான வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
அந்த காரின் டிரைவர், தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் தனியார் அமைப்பில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இரண்டு உடல்களை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து அந்த நபரிடம் தனது அடையாள அட்டையை காட்டும்படியும், உயிரிழந்தவர்களின் விவரங்களை காட்டும்படியும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் கார் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த 2 சவப்பெட்டிகளை திறந்து பார்த்தனர்.
அதில் சுமார் 290 கிலோ அளவுக்கு போதை பொருட்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து கார் டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் வைரஸுக்கு பலியானவரை கொண்டு செல்வதாக கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்திய சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.