'பேப்பர் வாங்க கூட கஷ்டம்'...ஆனா 'ஐ.ஏ.எஸ்' ...தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த 'பழங்குடி பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 06, 2019 03:53 PM

யூபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற முதல் கேரள பழங்குடிப் பெண் என்ற சாதனையை படித்திருக்கிறார் ஸ்ரீதன்யா சுரேஷ்.இவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sreedhanya Suresh becomes first person from Kerala tribes to crack IAS

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் முதல் முறையாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.வயநாட்டைச் சேர்ந்த அவர் அகில இந்திய அளவில் 410-வது ரேங்க்கைப் பெற்றிருக்கிறார். இவரது வெற்றி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கேரளாவின் பழங்குடி சமூகத்திலிருந்து முதல்முறையாக ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றிருக்கிறார் என்பது, பலருக்கு உந்து சக்தியாக இருக்கும் என கேரள முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.வயநாட்டின் குருச்யா என்ற பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர்கள் தினக் கூலிகள்.தினமும் செய்தித்தாள் கூட வாங்க முடியாத சூழலில்தான் ஸ்ரீதன்யா படித்து இந்த நிலையை எட்டி இருக்கிறார்.ஐ.ஏ.எஸ் நேர்காணலுக்காக டெல்லி செல்வதற்குக்கூட அவரிடத்தில் பணம் இல்லாத நிலையில்,தன் நண்பர்கள் பலரிடம் கடனாகப் பெற்ற 40,000 ரூபாயைக் கொண்டுதான் டெல்லி சென்று நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு வென்றிருக்கிறார்.

இதனிடையே ஸ்ரீதன்யா சுரேஷுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரின் கனவை நனவாக்கியுள்ளது. அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

சாதிப்பதற்கு எந்த சூழ்நிலையும் தடை இல்லை என்பதற்கு ஸ்ரீதன்யா ஒரு சரியான உதாரணம்.என்னுடைய வெற்றி இன்னும் பல பேருக்கு உந்து சக்தியாக இருக்கும் என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளார் ஸ்ரீதன்யா சுரேஷ் ஐ.ஏ.எஸ்.

Tags : #KERALA #RAHULGANDHI #PINARAYIVIJAYAN #UPSC #IAS #SREEDHANYA SURESH #KURICHIYA TRIBAL COMMUNITY