என் வாழ்க்கை படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? ராகுல் காந்தியின் சுவாரஸ்ய பதில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | Apr 05, 2019 10:02 PM
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் கல்லூரி மாணவ-மாணவியரிடையே 'மாற்றத்தை உருவாக்குபவர்கள்’ என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது சில கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 27 ஆயிரம் வேலைவாய்ப்புகள் பறிபோவதாக குறிப்பிட்டார். மேலும், நாங்கள் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திய பின்னரே தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றத்தக்க வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம்.
ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளதால் அதை ஈடுகட்ட வருமான வரி உள்ளிட்ட எவ்வித வரிகளையும் உயர்த்த மாட்டோம். இந்த திட்டத்தால் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
மேலும், ராகுல் காந்தியை அவரது சகோதரி பிரியங்கா காந்தி அவ்வப்போது மிகவும் தைரியமானவர் என்று குறிப்பிடுவது பற்றி ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘எனது அனுபவத்தின் மூலமாகவே இந்த தைரியம் உண்டானது. நான் பலவீனமான மக்களுக்கு பக்கத்துணையாக நிற்கிறேன்’ என்று கூறினார்.
இந்நிலையில், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும்படியாக எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படத்தைப் போல் உங்களைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் கதாநாயகி யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திருமணம் ஆகாத ராகுல் காந்தி வெகு சாதுர்யமாக சமாளித்து பதிலளித்தாவது, நான் உழைப்பை திருமணம் செய்து கொண்டுள்ளேன். வேலைதான் எனக்கு கதாநாயகி என்ற அவரது பதிலை கேட்டு அரங்கத்தில் இருந்த மாணவ-மாணவியர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மேலும், எனக்கு பிரதமர் மோடி மீது அன்பு உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு வெறுப்புணர்ச்சியோ, கோபமோ ஏற்பட்டதில்லை என்றும் இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.