"கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் கொரோனா உறுதியானதாக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட பெண் மாயமான வழக்கில் அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் 28 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கூறி ஆம்புலன்ஸில் பாதுகாப்பு உடைகளுடன் வந்த 2 பேர் அவரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணுக்கு கொரோனா உறுதியானதாவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அடுத்த நாள் அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, அப்படி யாருமே அங்கு அனுமதிக்கப்படவே இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
அதைக்கேட்டு அதிர்ந்துபோன அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர் அவரைக் காணவில்லை எனவும், கோரோனா இருப்பதாகக் கூறி அவரைக் கடத்தி சென்றிருக்கலாம் எனவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அத்துடன் அவருடைய புகைப்படத்துடன் செய்தித்தாளிலும் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்த அந்தப் பெண் பொம்மனஹள்ளி போலீசாரை தொடர்பு கொண்டு தான் காணாமல் போகவில்லை எனவும், தன்னுடைய கணவருடைய கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறுவதற்காக நாடகம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய தோழி ஒருவருடைய யோசனையைக் கேட்டே தான் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்களை வாடகைக்கு பிடித்து இந்த நாடகத்தை நடத்தியதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்றதாக கூறியுள்ள அவர், வீட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார். அப்போது அந்தப் பெண் கணவர் மீது புகார் எதுவும் கொடுக்காததால் வழக்குப்பதிவு எதுவும் அவர்மீது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
