'ஒரே நாளில் பெரும் இழப்பு'... 'இப்படி ஒரு நாளை நாங்க எதிர்பார்க்கவே இல்ல'... அதிர்ந்துபோன முதலீட்டாளர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நேரத்திலிருந்து பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் நிறுத்தப்பட்டது. இதனால் உலக அளவில் கடும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதன் பாதிப்பிலிருந்து தொழில் துறை தற்போது மெல்ல மெல்ல எழும்பி வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இங்கிலாந்து நாட்டில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த புதுவகை கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்தியச் சந்தைகளும் நேற்று சரிவைச் சந்தித்தன. இந்தச் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் ரூ.6.59 லட்சம் கோடி ஒரே நாளில் இழந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் நேற்று 2.87 சதவீதம் அல்லது 1,400 புள்ளிகள் இறக்கம் கண்டு 45,553.96 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
அதேபோல் தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 2.38 சதவீதம் அல்லது 327 புள்ளிகள் இறக்கம் கண்டு 13,433 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமானது. இந்தியச் சந்தைகளில் பங்கு விற்பனை அதிகரித்ததால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.6.59 லட்சம் கோடி அளவில் குறைந்தது. பிஎஸ்இயில் 2,433 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்தன. தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 4 சதவீத அளவிலும், தனியார் வங்கி 2.2 சதவீதமும் இறக்கம் கண்டுள்ளன.
மேலும் கொரோனா காரணமாக இங்கிலாந்து எல்லைகள் மூடப்பட்டதால் விமானச் சேவைத் துறை பங்குகள் அழுத்தம் கண்டுள்ளன. இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் வீழ்ந்துள்ளதால் எண்ணெய் துறை பங்குகளும் இறக்கம் கண்டன. ஓஎன்ஜிசி 7.6 சதவீதமும், இந்தியன் ஆயில் 6.8 சதவீதமும், பாரத் பெட்ரோலியம் 5.3 சதவீதமும் இறக்கம் கண்டன. இந்தியப்பங்குச்சந்தைகள் நவம்பர் மாதத்திலிருந்து நல்ல ஏற்றத்தைச் சந்திருந்து வந்த நிலையில் தற்போது இறக்கம் கண்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
